கந்தபுராணம் நாவல் யுடூபில் தொடராக வெளிவந்துகொண்டு இருக்கின்றது ஜீனியை தொட்டு இன்றே சப்ஸ்க்ரைப் செய்து கொள்ளுங்கள். அறிவே ஆனந்தம்

05. கந்தபுராணம் பகுதி 5 மௌனதீட்சை


### கந்தபுராணம் ## பகுதி 5##மௌனதீட்சை#

###pl check with writer any of your queries  RAVIKUMAR P.  7904313077, ravikumar.writerpoet@gmail.com ###

கல்லால விருட்சத்தினடியில் சனகாதிமுனிவர்கள் தவித்துக் கொண்டிருந்தனர்.   மகாதேவர் எங்குச் சென்றார் எப்போது அவரை மீண்டும் காண்பது என்று எண்ணங்கள் நால்வருக்குள்ளும் கலைந்து ஓடிக்கொண்டிருந்தது.  

சனந்தனர்  சனகரைப் பார்த்து அண்ணா இப்படி ஒரு சூழலில் நாம் இதுவரை ஆட்பட்டதில்லை.   மகாதேவர் நம்மை இப்படி நிர்கதியாக விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்.  நாம் காத்திருக்கலாமா சென்றுவிடலாமா.   காத்திருக்கலாம் என்றால் எவ்வளவு காலம் காத்திருப்பது என்றும் புரியவில்லை.   நாம் இங்கு வந்து எவ்வளவு காலம் கடந்திருக்கின்றது என்பதை உணர்வதற்கும் சாத்தியமில்லாது இருக்கின்றது.   இன்னும் எவ்வளவுக் காலம் காத்திருக்கவேண்டும் என்றும் அறிந்துகொள்ள முடியவில்லை.  காலத்தைப் பற்றி நாம் ஆராய்ந்து அறிந்த அனைத்து அறிவும் இங்குப் பலனில்லாமல் தவிக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகின்றது.

ஆம் சனந்தனா நீ கூறுவது உண்மை.  இவ்விடத்தில் காலம் என்பது தொக்கி நிற்பதுபோன்றே நானும் உணர்கின்றேன்.   பிரம்மலோகத்தில் இருக்கும் வரை நாம் காலத்தோடு பொருத்திப் பார்ப்பதற்கு அங்கே ஒரு உலகம் இருந்தது இரவு பகல் என்கின்ற வித்தியாசம் இருந்தது.   நேரத்தை அவதானிக்கத் தேவையான  இவை இல்லையென்றால் நாம் காலத்தை எதைக்கொண்டு நிர்ணயிப்பது.

சனத்குமாரா நம்மில் நீயே அறிவுத்தெளிவு மிகுதியானவன் உனக்கு என்ன தோன்றுகின்றது.  

அண்ணா உங்கள் மனநிலையில்தான் நானுமிருகின்றேன்.   இங்கே உலகங்கள் தோற்றமெடுத்து வளர்ந்து பரவிச் சென்று பின்னர் மீண்டும் மறுசுழற்சி செய்யப்படுவதுபோலத் தொற்றமளிகின்றது.  இருளும் இல்லாது ஒளியும் இல்லாத ஒருவித நிலை எங்கும் நிறைந்திருக்கின்றது.   பகலும் இரவுமற்ற இந்த இடத்தில் காலத்தின் சுழற்சியே இருப்பதாகத் தெரியவில்லையே.   சுழன்றுகொண்டிருக்கும் ஒரு சக்கரத்தின் மையம் சுழலாது நிலைபெற்றிருப்பதைப் போலக் காலம் இங்கே சுழலாமல் நகராமல் ஓரிடத்தில் நின்றுவிட்டதுபோலத் தோன்றுகின்றது.  இதன் தாக்கத்தால் என் மனதினை ஒரு வெறுமை சூழ்ந்துகொண்டு வருகின்றது.

மூவரும் அமைதியாக விழித்துக் கொண்டிருந்த சனாதனரைப் பார்க்க.  ஆமாம் சகோதரர்களே  இடத்தோடு சம்பந்தப்பட்டு நிகழ்வுகளோடு பின்னிக்கொண்டு ஒரு சங்கிலித் தொடர்போல சுற்றிவருகின்ற காலம்  அந்த சுழற்சி இல்லையெனில் எங்கிருக்கும்.   இவ்விடத்தில் அப்படிப் பட்ட சுழற்சி எதுவும் நடக்கவில்லை.   எதனோடும் ஒப்பிட்டு நோக்க இயலாததனால் நாம்  காலம் என்ற ஒன்று இல்லாததுபோலத் தோன்றுகின்றது.

சனகர் தன் சகோதரர்களைப் பார்த்து சகோதரர்களே நாம் காலத்தைவிட்டு வெளியே வந்துவிட்டோமோ என்று தோன்றுகின்றது.   இங்கே மொத்தப் பிரபஞ்சமும் சுழன்றுக் கொண்டிருக்கின்றது.   சுழலுகின்ற பிரபஞ்சத்தில் சுழலாத அசையாத ஒன்றுக்கு ஏது காலம்.  இதுவே அனைத்திற்கும் மைய அச்சாகவும் ஆதாரமாகவும் இருக்கின்றது அதனால் காலத்தைத் தாங்கிய அனைத்தும் காலம் என்கின்றவொன்று இல்லாத இங்கிருந்தே பிறக்கின்றன வளர்ந்து அழிந்து மறுசுழற்சி அடைகின்றன போலத் தெரிகின்றது.  

அவர்கள் சம்பாசனைகள் தொடர்ந்துகொண்டிருக்கும் போதுகல்லால ஆசனத்தின் மீது ஒரு மின்னல் வெட்டி மறைந்தது மீண்டும் அங்கு மகாதேவரின் உருவம் தெரிய ஆரம்பித்தது.  

முனிவர்கள் கலக்கம் மறைந்து பெருமூச்செறிந்தனர்.

மகாதேவர் சனகாதி முனிவர்களின் கலக்கமும் கவலைத் தோய்ந்த முகங்களையும் பார்த்துப் புன்னகைத்தார். 

இதுவே நல்ல நேரம் நாம் கேட்க வேண்டியதனைத்தையும் கேட்டுவிட வேண்டியதுதான் என்று நினைத்துக்கொண்டு தாம் யார் என்றும் எதற்காக இங்கு வந்திருக்கின்றோமென்று கூறலாயினர்.  புன்னகையைத் தவிர மறுமொழி ஏதுமின்றி மகாதேவர் அவர்களைக் கவனித்துக்கொண்டிருந்தார்.  முனிவர்கள் தம் தந்தையிடம் உரையாடியதுபோல மனதில் எழுந்தக் கேள்விகள் சிலவற்றை அவரிடம் கேட்கலாயினர்.   அனைத்தையும் கிரகித்துக் கொண்ட மகாதேவர் அவர்கள் நால்வரையும் ஆழமாகப் பார்த்துக் கொண்டே தமது கையில் சின்முத்திரை காட்டிப் புன்னகையொன்றை உதிர்த்தார். 

ஐயன் எதோ கூறப்போகின்றார் என்று நினைத்த சனகாதி முனிவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.  தேவரின் பார்வை அவர்களை இன்னும் ஆழமாக ஊடுருவிக் கொண்டிருந்தது.  முனிவர்களின் மேனியிலிருந்த பதட்டம் அடங்கிவிட்டிருந்தது, மூச்சும் ஆசுவாசப்பட்டு அமைதியாகிக்கொண்டுவருவதை உணரவாரம்பித்தனர்.   மகாதேவர் எந்தச் சலனமுமின்றி அவர்களை திடதிருச்டியோடு பார்த்துக்கொண்டிருந்தார்.  முனிவர்களின் மனக்கலக்கம் நீங்கி மனம் தெளிவடைந்துகொண்டிருந்தது.
 
அவர்களின் காதுகளில் பேரிகை போல ஒலித்துக்கொண்டிருந்த இதயத்துடிப்புச் சப்தமுமடங்கி ஒலியற்று அவர்களுக்குள்ளே எங்கும் நிசப்தம் நிலவியது.  மலையை விழுங்கிவிட்டவர்கள் போல அவர்களுக்குள்ளே ஒரு பெரியகனம் வந்து சூழ்ந்துகொண்டது.  மௌனத்தின் பாரமேறஏற எங்கே உடலும் மனமும் வெடித்துச் சிதறிவிடுமோ என்று முனிவர்கள் பயம்கொள்ள ஆரம்பித்தனர்.  மகாதேவரின் திருஷ்டி அவர்களைவிட்டு விலகவில்லை.  முனிவர்களுக்குள்  எழுந்துகொண்டிருந்த கேள்விகள் அனைத்தும் அவைகள் எழுந்த இடத்திலேயே அடங்கி சூனியத்திற்குள் புதைந்துபோயின.   அவர்களிடத்துஎங்கும் எதிலும் அசைவுகளில்லை சப்தமில்லை நாட்டமில்லை வெறுப்பில்லை கேள்வியில்லை பதிலில்லை வாதவிவாதமில்லை குழப்பமில்லை சிந்தனையுமில்லை உள்ளும் புறமும் எங்கும் மௌனத்தினாட்சி கடைவிரித்திருந்தது.  

மெளனக்கடலில்  மூழ்கித் திளைத்துக்கொண்டிருந்த முனிவர்கள் தாம் கற்றுப்பயின்றுத் தேரியதாகக் கர்வம்கொண்டிருந்த அனைத்து வித்தைகளும்,கலைகளும்,ஞானங்களும் உடைந்த சிறுமரத்துதுண்டுகளாகஅந்தக்கடலில் அங்கங்கே மிதந்து கொண்டிருப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சியுற்றனர்.  அக்கணமே அவர்களது ஆணவம் நிலைகுலைந்து மாண்டுபோனது.   அவர்களது ஆன்மா இறுதியாகத் தாம் எதைக் கற்கவேண்டுமோ அது தமக்குக் கற்பிக்கப்பட்டுவிட்டதை உணர ஆரம்பித்தது.
நாடிவந்தவர்களை வழியனுப்பிவைக்க  நினைவுகள் சூழ்நிலையோடு பொருந்தியிருக்கவில்லை,  மகாதேவர் மீண்டும் தவத்தில் மூழ்கினார்.

முனிவர்கள் நினைவுத் தெளிந்து தமதுத்தந்தையை நினைக்க அவர்களைச் சுற்றி நான்குத்தாமரை விமானங்கள் வந்திறங்கின.   அவை அவர்களைச் சுமந்துகொண்டு பிரம்மலோகத்தை நோக்கிச் செல்ல ஆரம்பித்தன.

சூனிய வனத்திற்கருகில் இருந்த அரண்மனைக் கொத்தளத்தின்  காவலர்கள் போருக்கான முரசினை ஒலித்து அனைவரையும் விழிப்படையச் செய்துகொண்டிருந்தார்கள்.   தூரத்தில் மூன்று ஒளிப்புள்ளிகள் கோட்டையை நோக்கி வந்துகொண்டிருந்தன.   தேவர்கள் விமானத்தில் வந்தே போர்புரிவார்கள் எனவே படையை எச்சரிக்கை செய்யும்பொருட்டு முரசு ஒலித்துக்கொண்டிருந்தது.

சிவபூசையில் இலயித்திருந்த  அரசியர்கள் மூவரும் போர்முரசு ஒலிப்பதையும் துந்துபிகள் சப்தமிடுவதையும் கேட்டுத் திடுக்கிட்டார்கள்.  இது என்ன சோதனை மன்னர் இல்லாதபோது இப்படியொரு சங்கடம் என்று அவர்களுக்குக் கலக்கம் ஏற்பட்டது.  மந்திரிகளுக்கும் தளபதிகளுக்கும்  அழைப்பை எடுத்துக் கொண்டு வீரர்கள் பறந்தனர். 

தூரத்தில் தெரிந்த அந்த வானூர்திகளைஎதிர்கொண்டழிப்பதற்காக  கொத்தளத்தில் நின்றுகொண்டிருந்த வீரர்கள் தங்கள் ஆயுதங்களை எடுத்துத் தயார் நிலையில் வைத்துக் கொண்டார்கள்.  அம்புகளையும் கல்லையும் வீசுகின்ற எந்திரங்களும், தீயுருண்டைகளைக்கக்குகின்ற எந்திரங்களும் தயார்நிலைப் படுத்தப்பட்டன.

பிற இடங்களிலிருந்து தேவையான போர்வீரர்களை வரவழைக்கச் சிலர் புரவியில் ஏறிச் செல்ல ஆரம்பித்தனர்.  அருகில் ரோந்துப் பணியிலிருந்த வீரர்கள் அரண்மனை வேலையில் மூழ்கியிருந்தவர்கள் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் அனைவரையும் உரத்து ஒலித்த போர்முரசின் சப்தம் கலக்கத்துடன் விழிக்கவைத்தது.  அனைவரும் தங்கள் ஆயுதங்களைத் தேடி எடுத்துக்கொண்டு கோட்டை வாயிலை நோக்கி ஓடினர்.

தூரத்தில் ஒளிப் புள்ளிகளாகத் தெரிந்த அந்தப் பறக்கும் ஊர்திகள் வீரர்களின் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது.   நெருங்கிவரவர அதன் வடிவமும் பிரகாசமும் தேவர்கள் போர்தொடுத்து வந்துவிட்டார்களோ என்ற அச்சத்தை ஊட்டியது.   எந்த எதிர்ப்புகளும் தெரிவிக்காமல் அருகில் வந்த பறக்கும் ஊர்திகளின்மீது வீரர்கள் தொடுத்த அம்புகளும் வேல்களும் கற்களும் தீயுருண்டைகளும் அவைகளைத் தொடும் முன்னரே வலிமையிருந்து கருகி வீழ்ந்ததைப் பார்த்தவர்களின் மனம் மேலும்கிலிகொண்டு நடுங்கியது.

இந்த எதிர்ப்புகளை எதையும் ஒருசிறிதும் பொருட்படுத்தாது அமைதியாக வானில் தவழ்ந்துவந்த இந்திரஜாலவிமனங்கள் அரசியர்கள் பூசை செய்துகொண்டிருந்த ஆலயத்தின் முன்புக் கீழிறங்கியது.  திகிலோடு அதைப் பார்த்துக் கொண்டிருந்த அரசிகளுக்கு அதிலிருந்து கீழிறங்கும் தமது சுவாமிகளைப் பார்த்தவுடன் காலிலிருந்து தலைவரைச் சில்லிட்டு என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே சிலைபோல நின்றுகொண்டிருந்தனர்.  

தேவி ஏன் அப்படியே நின்றுவிட்டாய் என்ற சூரனின் வார்த்தைக் கேட்டு நினைவு திரும்பிய பதுமகோமளை கண்கள் விரியச் சூரனின் அடிகளைப் பற்றி எழுந்தாள்.  

பதுமகோமளையை தன்னுடன் அணைத்துக் கொண்ட சூரன்,  தேவீ கலக்கம் கொள்ளாதே நீ இவ்வாறு இனிச் சிவனைப் பூசித்துத் துன்பப்பட அவசியமில்லை.  நாம் மூவரும் தவத்தால் மூவுலகும் வெல்வதற்கான வரம் பெற்றுவந்தோம்.  இனி அந்த ஈசனே நினைத்தாலும் எம்மை எதிற்கொண்டழிக்க இயலாது.  அண்ட சராசரங்களையும் எம் வலிமையால் கட்டியாள்வோம்.  அவுணர்கள் குலம் மிகுந்த வலிமையுடன் தழைக்கும் கவலைக் கொள்ளாதே.   என்று அவள் விழிகளை உயர்த்திப் பார்க்கச்  சூரனின் வசனம் கேட்டு சந்தோசமும் கவலையும் கொண்ட ஒரு பார்வை அவளிடத்திலிருந்து மீண்டது.

சூரனின் வரவு அங்கு அரசிக்குப் பாதுகாப்பிற்காகவும் அரசகாரியங்களைக் கவனித்துக் கொள்ளவும் உடன் வாழ்ந்திருந்த மந்திரிப்பிரதானிகளுக்குத் தெரியப்படுத்தப்பட்டு அவர்கள் வாசலில் வந்து காத்திருப்பதை அறிந்த சூரன் அவர்களை அருகில் அழைத்தான்.

அசுர வேந்தனுக்கு வாழ்த்துக்கள் கூறி அங்கு வந்த மந்திரிப் பிரதானிகளிடம் சூரன் நாம் தவம் செய்த காலத்து இங்குள்ள மக்கள் பல துன்பங்களை அனுபவித்துள்ளனர் ஆகையால் நாம் தவம் செய்தகுன்றைச் சுற்றியுள்ளக் கிராமங்களுக்கு எம் பெயரில் தானங்கள் செய்யுங்கள்.   நாம் வரம்பெற்ற நாளை நினைவுறுத்தி விழாக்கள் கொண்டாடும்படியும் அதற்குத்  தேவையான பொன்னையும் பொருளையும் நீவிர் அரசுக்கருவூலத்திலிருந்து அவர்களுக்கு அளியுங்கள்.   என்று  அறிவுறுத்திவிட்டு அரசியர்களுடன் மூவரும் விமானங்களில் ஏறி அமர்ந்துகொள்ள விமானங்கள் எழுந்து மகேந்திரபுரியை நோக்கிப்பறக்க ஆரம்பித்தன.  

கோட்டையின் கொத்தளத்தில் வீரர்கள் என்ன நடக்கின்றது என்று புரிந்துகொள்ள முடியாமல் குழம்பிக் கொண்டிருக்க அவர்கள் பார்வையின் முன்னே கீழிறங்கிய விமானம் இப்பொழுது  மேலெழும்பியதைக்   கண்ணுற்ற வீரர்கள் அவற்றின்மீது வீரர்கள் தமது ஈட்டியை எரிவதற்குத் தயார் செய்வதற்குள் விமானங்கள் வானில் பறந்து ஒரு புள்ளியாக மறைந்துபோனது.   அசம்பாவிதம் ஏதும் நடந்ததுபோலத் தெரியாத சந்தோசக்குழப்பத்தில் சேதி அறிவதற்காக கொத்தளத்துக் காவல் தலைமை மணியக்காரரை மந்திரியைக் காண அனுப்பிக் கொண்டிருந்தார்.
### கந்தபுராணம் ## பகுதி 5 ## தொடரும்....  

வாசகர் பக்கம்

கந்தன்கதை புத்தகம்   910 பக்கங்கள் மற்றும் இதன் அட்டையிலிருப்பது போன்ற அரிதான போர்க்களக்காட்சிகளின் வண்ணப் படங்களுடன் இந்த kindle பதிப்பு வ...