கந்தபுராணம் நாவல் யுடூபில் தொடராக வெளிவந்துகொண்டு இருக்கின்றது ஜீனியை தொட்டு இன்றே சப்ஸ்க்ரைப் செய்து கொள்ளுங்கள். அறிவே ஆனந்தம்

04. கந்தபுராணம் பகுதி 4 சூரன் பெற்றவரம்

###கந்தபுராணம்## பகுதி 4## சூரன் பெற்றவரம் ####
###pl check with writer any of your queries  RAVIKUMAR P.  7904313077, ravikumar.writerpoet@gmail.com ###
அசுரர்கள் தவம் செய்யும் பாறையின் முன் திடீரென்று இருள்போன்ற மங்கலான ஒளி வானத்திலும் பூமியிலும் சூழ ஆரம்பித்தது.  சூரியனின் ஒளிக் கதிர்களும்கூட அதை ஊடுருவித் தரையைத் தொட இயலவில்லை.  பகலில் தோன்றும் கிரகணத்தில் வெளிப்படுவது போன்ற ஒரு மங்கலான வெளிச்சம் அதிலிருந்து எங்கும் பரவியது.  அதன் நடுவிலிருந்து கண்களைக் கூசச் செய்யும்படியான கோடிச் சூரிய பிரகாசத்துடன் ஒரு ஒளிப்பிழம்பு வெளிப்பட்டு அசுரர்களின் முன்னால்  தோன்றியது.   அந்த ஒளிப்பிழம்பிலிருந்து வெளிர்நீல நிற ஒளிக்கதிர்கள் தோன்றி அந்த வனமெங்கும் பரவி ஊடுருவிச் செல்ல ஆரம்பித்தன.  உயிர்க்கொண்டவைப்போலத் தெரிந்த அந்த அந்த ஒளிக்கதிர்கள் ஓடித்தேடிச்சென்று தொட்ட இடங்களெல்லாம் மடிந்து மட்கிப்போன அனைத்தும் தமது இயல்பு நீங்கி உயிர்ப் பெற்றெழுந்து உலாவ ஆரம்பித்தன. 

தம்மைச் சுற்றி நடப்பது எதையும் அறிந்துகொள்ளும் நிலையில் தவம் செய்யும் அந்த மூவரும் இல்லை.  சதைகள்  எலும்புகளோடு கரைந்து ஒட்டிக் கொண்டு  வெறும் எலும்புக் கூடுகளாகவே அவர்கள் தேகம் காட்சியளித்தது உடலில் எஞ்சியிருந்த சதைகள் அங்கங்கே கிழிந்து தொங்கிக் கொண்டிருந்தன.   சடாமுடிகளும் நகங்களும் நீண்டு வளர்ந்து பறையிலும் தரையிலும் படர்ந்துக்கிடந்தன.  காய்ச்சிய இரும்புத் தூண்களைப் போல அவர்களது தேகம் சிவந்து ஒளிவீசிக்கொண்டு எந்த அசைவுமின்றி நின்றுகொண்டிருந்தது.  புலன்களேதும் அவர்களிடத்தில் உயிர்ப்புடன் இருப்பதாகத் தெரியவில்லை.   எழுபத்தீராயிரம் நாடிகளும் அடங்கி அவர்களது மூவரின் உடலிலும் உயிர் மட்டுமே எஞ்சிநின்று ஜொலித்துக் கொண்டிருந்தது.  

வானில் தோன்றிய அந்த வெண்ணிற ஒளியின் ஜாலம் அவர்கள் மீதும் படர அவர்கள்தாம் உடலிலிருந்து இழந்த ஒவ்வொரு சதையும் நரம்புகளும்  மீண்டும் உயிர் பெற்று அவர்களின் உடல் இயல்பான  தோற்றத்திற்கு மீண்டு வந்துகொண்டிருந்தது.   பார்ப்பதற்கு அந்த ஒளிக்கீற்றுகள் அந்த சிவந்த தூண்களில் அம்மூன்று அசுரர்களின் சிலைகளையும் செதுக்குவதுபோலக் காட்சியளித்து.

அசுரர்களின் உடலைச் செப்பனிட்டு முடித்த அந்த ஒளிக்கீற்றுகள் அதைத் ஊடுறுவிச்சென்று உயிரைத் தொட்டதும் சூரன் தன்னுணர்வு அடைந்து அவனது அகக்கண்கள்  தாமாகவே திறந்துகொண்டன.  ஆனால் அவன் புறவிழிகள் இன்னும் மூடியேக் கிடந்தன.   எதிரில் நின்ற ஒளியின் பிரகாசம் அவன் அகக்கண்களை சிறிதும்கூசச் செய்யவில்லை.   மாறாக அதை அவன் ஊடுருவிப் பார்க்க அந்த ஒளியினூடே டமரமும் சூலமும் பிறைநிலவும் நாகமும் அணிந்து விரிந்த சடைகளும் திருமுடியுடன் கூடிய  ஒரு முகம் அலையடி கொண்டு  பிரகாசித்துக் கொண்டிருந்தது.  அவன் உடலில் இன்னும் அசைவுகள் ஏதுமில்லை பாரையைப்போலவே அது சமைந்திருந்தது.   ஆனால் உள்ளே மனம் அசைய ஆரம்பித்துவிட்டிருந்தது.  

சூரனின் மனம் குவிந்துதொழுதது பிரபோ தாங்கள் தரிசனம் தந்தமைக்கு நன்றி.  வாழ்வின் நுனியிலிருந்த எம்மை இன்று வாழ்விக்க வந்தீர்கள்.   தங்களின் கருணை அசுரக்குலம் அறியாததல்ல.  சூரனின் உதடுகள் அசையவில்லை அவன் மனம் மட்டுமே அசைந்துகொண்டிருந்தது.  தங்கள் தரிசனத்தால் நான் தன்யனானேன்.   தங்களின் இந்த தரிசனம்  பெறவே நாம் இங்கு கடும் விரதம் மேற்கொண்டோம்.

 இன்று தங்கள் கருணை மழை எம்மீதுப் பொழிந்து எம்மை வாழ்வித்துக் கொண்டிருக்கின்றது.   தங்கள் வரவால் இங்கு இருக்கின்ற அனைத்து உயிர்களும் புத்துயிர் பெற்றெழுந்து நிற்கின்றன.   தங்கள் கருணை இவ்வளவு அளப்பரிய ஆற்றலுடையது என்றால் எம்மில் எஞ்சி நிற்கின்ற  உயிரையும்கூட அதர்க்கீடாகத்தர சித்தமாயிருக்கின்றோம். 

எம்மால் அழிந்த இந்த வனம் இன்று உம்மால் உயிர்ப் பெற்றெழுந்து நிற்கின்றது.  இதோ எமது ஜீவனும் உடலும்கூட முழுமைப்பெற்றுக்கொண்டிறுக்கின்றது.  எம்புடையதென்று நாம் நினைத்ததெல்லாம் அழிந்து உம்முடையதால் அனைத்தும் இன்று மீண்டும் கிடைத்தது ஆகையால் அனைத்தும் உம்முடையதாகவே உணர்கின்றேன்.   எம்மை ஆசிர்வதித்தருளுங்கள்.
சூரனே உனது பக்தியும் தியாகமும் தவமும் எம்மை மகிழ்வித்தது.  இந்த உலகில் தவம் செய்கின்ற ஒவ்வொரு உயிரும் அதற்குரிய பலனை அடைந்தாகவேண்டும்.   இந்தப் பிரபஞ்ச விதியை நாமே நிறைவேற்றி வைக்கின்றோம்.    உனது விருப்பமென்ன கேட்பாயாக

சூரனின் உடலில் எந்த அசைவுமில்லை அவன் செவிகளும் செயல்படவில்லை.   மனம் மட்டும் விழித்துக் கொண்டு அனைத்தையும் கிரகித்துக் கொண்டு வார்த்தையாடிக் கொண்டிருந்தது.  

தேவதேவே நீடூழிகள் தேகம் மாண்டுபோகாமல் நான்வாழவேண்டும்ஆகையால் எனக்கு இறவாத்தன்மையைத் தந்தருளவேண்டும். 

தவத்தில் சூரனே பிறந்த அனைத்து உயிர்களும் ஒருசமயம் இறந்தே ஆகவேண்டும்.   பிறவாமலிருப்பவர்களே இறவாமலிருகின்றார்கள் அப்படி இறாவாமலிருப்பவர்களே பிறவாமல் இருக்கவும் சாத்தியமாகின்றது. 

 அந்த பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில் நீ என்ன சாதிக்கின்றாய் என்பதே உனக்குப் பெருமைகளைச் சேர்க்கும்.   ஆகையால் நீ விரும்புகின்ற இறவாத்தன்மை என்பது வரங்களால் பெறப்படுவதன்று என்பதைத் தெரிந்துகொள்.   ஏனெனில் இறவாதிறுப்பது உன்கையிலேயே உள்ளது அது உன்னாலே அடையப்படுவதேயன்றி பிறரால் கொடுக்கப்படுவதல்ல.

 தவத்திற்கேற்ற வரம் தருவதற்கு எமக்கும் சில எல்லைகள் உண்டு ஆகையால் உனக்கு இறவாவரம் தவிர்த்து வேறு வரங்கள் எதுவாயினும் தரச் சித்தமாயிருக்கின்றோம். 

காலத்தால் என்றும்  அழியாதவரே காலனுக்கும் காலனே தங்கள் அன்பும் கருணையும் ஒரு பக்தனைக் காக்கின்ற கவசங்கள்.   உம் அன்பு  எம்மீது இருக்கும்வரை எம்மை யாராலும் வெற்றி கொள்ளமுடியாது.   அதனால் தங்களுடைய சக்தியால் உருவாகும் குமாரனால் அன்றித் தங்களாலோ, பிறிதொருவாராலோ மற்றும் வேறு எந்த சக்தியாலுமோ  எனக்கு மரணம் சம்பவிக்கக் கூடாது.  மேலும் படைக்கப்பட்ட உயிர்கள், அல்லது விலங்கினங்கள், தோற்றுவிக்கப்பட்ட ஆயுதங்கள் ஆகிய எவற்றாலும், எனக்கு மரணம் நிகழக்கூடாது

தங்களாலோஎன்று சூரன் கூறியதைக் கேட்டவுடன் மகாதேவரிடத்திலிருந்து சிரிப்பொலி  வெளிப்பட்டு அந்த வனமெங்கும் எதிரொலித்தது.  மகனே நீ மிகவும் சதுர்யமானவன்.  நீ விரும்பியபடியேத்தந்தோம் எனது சக்தியாலே உண்டாகும் பாலகனால் மட்டுமே உனக்கு மரணம் நிகழுமன்றி எம்மாலும் உன்னை வெல்லவியலாது என வரம் தந்தோம்.  

மகாதேவரே நமை எதிர்த்து நிற்கமாட்டேன் என்று வரம் தந்துவிட்டார்.   இனி இந்த பிரபஞ்சத்தில் நம்மை எதிர்ப்பவர் எவருமில்லை சூரனுக்கு மகிழ்ச்சிப் பெருகியது.  மகாதேவராவது குழந்தைப் பெற்றுக் கொள்வதாவது அது என்றும் நடவாத காரியம் நாம் ஏறக்குறைய சாகாவரம் வாங்கிவிட்டோம் மகாதேவரும் யோசிக்காமல் வரம் தந்துவிட்டார் நினைத்ததைச் சாதித்துவிட்டோம் என்று சூரனின் மனம் குதூகலித்தது.

சூரனைப் போலவே மனம் மட்டும் விழித்துக் கொண்டு அந்த உரையாடலை சிங்கமுகனும் தாரகனும் கவனித்துக் கொண்டிருந்தனர்.

ஐயனே அசுரர்களின் குலம் தழைக்கவே நாம் இந்தத் தவம் மேற்கொண்டோம்.   ஆதலின் எமக்குப் பராக்கிரமம் மிகுந்த புத்திரர்களைத் தந்தருளவேண்டும்.

ஆகட்டும்

தேவதேவே ஒரு அரசனுக்கு அவன் அடைகின்ற புகழே காலங்கள் கடந்தும் அவனைப் பற்றி உலகில் பேசவைக்கும்.  எவ்வளவு சக்திகள் வல்லமைகள் இருந்தாலும் ஒருவனுக்குப் பெருமையுடைய அரசாட்சியே அரசனுக்குப் புகழைத் தேடித் தருகின்றது ஆகையினால் இந்திராதி தேவர்களையும்,  அகில உலகங்களையும் ஆளுகின்ற வல்லமை தந்தருளவேண்டும்.  

வார்த்தைகளில் வல்லவனே ஆயிரத்தெட்டு அண்டங்களையும் நூற்றிஎட்டு யுகங்கள் நீ அரசாட்சி செய்திருக்க வல்லமைகள் தருகின்றோம்.  அவைகளைக் காக்கும் பொருட்டு உனக்கு  ஆக்னாசக்கரமும் நினைத்த மாத்திரத்தில் எங்கும் சென்றுவரச்சக்தியுடைய இந்திரஜால விமானங்களையும் அம்மூவருக்கும் தந்தோம்.   நீ ஆட்சிசெய்யும் காலம் வரை உனதுச் சகோதரர்களும் உனக்குப் பக்கத்துணை நிற்பார்கள்.  

தன்னிலிருந்து உமிழ்ந்துகொண்டிருந்த கொண்டிருந்த ஒளிக்கதிர்களை மீண்டும் உள்வாங்கிக்கொண்டு அந்த ஒளிப்பிழம்பு ஆகாயத்தில் கரைந்து மறைந்து போனது.   மீண்டும் சூனியவனத்தில் சூரியஒளிப் படர ஆரம்பித்தது.  

மகாதேவர் சென்றவுடன் கண்விழித்துப் பார்த்த அசுரர்கள் மூவரும் தாம் தவம் செய்வதற்கு வருவதற்கு முன் தமது உடல் எப்படி இருந்ததோ அதைவிட வலிமையாகவும் தேஜசுடனும் இருப்பதைப் பார்த்து மகிழ்ந்தார்கள்.   ஒருவேளைக் கண்டதெல்லாம் கனவோ என்று சந்தேகம் எழுவதற்குள் மூவருக்கும் அருகில்  சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் மூன்று வானூர்திகள் தோன்றின.   வனமும் அதிலிருந்த தாவர விலங்கு சங்கமங்களும் எப்போதும் போல இயங்கிக் கொண்டிருந்தன.  மகிழ்ச்சியுடன் மூவரும் இந்திரஜாலவிமானத்திலேறி அமர்ந்துகொள்ள.   அவைகள் வானில் உயர்ந்து அவர்கள் மனதின் கட்டளைப்படி நகர ஆரம்பித்தது. 
----------------- புத்தகம் கிடைக்கும் இடம் -------------


வாசகர் பக்கம்

கந்தன்கதை புத்தகம்   910 பக்கங்கள் மற்றும் இதன் அட்டையிலிருப்பது போன்ற அரிதான போர்க்களக்காட்சிகளின் வண்ணப் படங்களுடன் இந்த kindle பதிப்பு வ...