கந்தபுராணம் நாவல் யுடூபில் தொடராக வெளிவந்துகொண்டு இருக்கின்றது ஜீனியை தொட்டு இன்றே சப்ஸ்க்ரைப் செய்து கொள்ளுங்கள். அறிவே ஆனந்தம்

02. கந்தபுராணம் பகுதி 2 சனகாதிமுனிவர்கள் கல்லாலம் செல்லுதல்:



#### கந்தன்கதை (கந்தபுராணம்) ## பகுதி 2# சனகாதிமுனிவர்கள் கல்லாலம் செல்லுதல்:
###pl check with writer any of your queries  RAVIKUMAR P.  9841189033, ravikumar.writerpoet@gmail.com ###

தாமரையின் சுகந்த மணத்தினையும் மீறி எங்கும் புத்தகங்களின் ஓலைச்சுவடிகளின் மணமே நிறைந்திருந்தது பிரம்மலோகத்தில்.  நான்முகனும் நாமகளும் மலர்ந்திருந்த தாமரையின் மீது அமர்ந்துகொண்டு தம்முன் நின்றுகொண்டிருந்த முதிர்ந்த முனிவர்கள் நால்வரையும் கருணையோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.   முனிவர்களின் பின்னால் இருந்த அறைகளும் அதன் பின்னால் நிறுவப்பட்டிருந்த மாளிகைகளனைத்திலும் தேவலோகத்திலும் பூலோகத்திலும் ஆக்கப்பட்ட எண்ணிலடங்கா நூல்களின் பிரதிகள்மலைப்போல அடுக்கப்பட்டுக்

குவிந்து  கிடந்தது.  பார்ப்பதற்கு நூலகம் போன்ற தோற்றம் கொண்ட அந்த மாளிகையில் எண்ணிறந்த பிரம்மலோகவாசிகள் தங்கள் அறிவுத் தாகத்தைத் தீர்த்துக் கொள்ள வந்திருந்து நூல்களை ஆராய்ந்துகொண்டும் உரையாடிக் கொண்டும் வாத விவாதங்களைச் செய்துகொண்டும் நிறைந்திருந்தனர்.  பிரம்மதேவரால் நியமிக்கப்பட்டிருந்த சில பிரம்ம தூதர்கள் அங்கு ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அனைவருக்கும் வேண்டிய புத்தகங்களை எடுத்துத் தருவதுவும் மீண்டும் எடுத்து அடுக்கி வைப்பதுமாக உதவி செய்துகொண்டிருந்தனர்.

நிறைவில்லாத மனம் கொண்டவர்களாய்க்குழப்பத்துடன்நின்றுகொண்டிருந்த அந்த நால்வரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டே யார் முதலில் துவக்குவது என்றுச் சைகையில் தமக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.  ஒருவழியாக மூத்தவரான சனகரின் வசம் கேள்வியைத் துவங்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு அவர் தனது மௌனத்தைக் கலைத்தார்.

தந்தையே தங்களின் நான்கு முகங்களிலிருந்தும் மானசப் புத்திரர்களாகப்  பிறந்த நாங்கள் இதுவரை தங்களின் அறிவுரையின்படி அனைத்து வேதங்களையும் புராணங்களையும் வேதாந்தங்களையும் மற்றும் இங்குக் கிடைக்கப் பெற்ற அனைத்து நூல்களையும் களவரக்கற்றுத் தெரிந்துகொண்டோம்.   ஆனால் உண்மையைத் தெளிந்துவிட்டோம் என்று மகிழ்சிகொள்ளமுடியாத அளவிற்கு மனம் அதீதச் சஞ்சலமும் அடைந்துள்ளது.  காலம் கடந்து எங்கள் நிலை இன்று முதுமையை எட்டித் தொட்டுக் கொண்டுள்ளது.  இவ்வளவுக் காலங்கள் நாங்கள் ஆராய்ச்சியில் காலத்தைச் செலவழித்தும் எங்களுக்குக் கேள்விகள் அடங்கி  மானவமைதி பிறக்கவில்லை ஒரு கேள்வியை அறிந்துகொள்ளத் துணிபுடன் பலநூல்களை ஆராய்ந்தால் அதிலிருந்து மேலும் பல கேள்விகள் பிறந்து உயிர்த்தெழுகின்றன.  இன்று எமது உடலும் மனமும் கேள்விகளாலே நிறைந்திருக்கின்றது.   எதை அறிந்துகொள்வதால் இந்தக் கேள்விகள் அனைத்தும் நீங்கும் என்றுத் தெரியவில்லை.

இதுவரை நாங்கள் வேதங்கள் கூறுகின்ற கர்ம வாழ்க்கையும்  வேதாந்தம் கூறுகின்ற தத்துவ வாழ்க்கையும் புராணங்கள் கூறுகின்ற கடமைகளைச் செய்கின்ற வாழ்க்கையும் ஆராய்ந்து அறிந்துகொண்டோம்.   ஆனாலும் உண்மையிலேயே ஒருஜீவன் இவற்றை அறிந்துகொள்வதனால் உண்மையான உயர்வினை அடைந்து முக்தியடைகின்றதா என்று புரியாமல் தவிக்கின்றோம் ஆகையால் தாங்கள்தான் எங்கள் சஞ்சலம் தீர்க்கவேண்டும்.  

புத்திரர்களே இவை அனைத்தும் ஜீவர்களுக்கு வாழ்க்கையைப் பற்றிய தெளிவைக் கொடுத்து நெறிப்படுத்தி வாழ்க்கையைச் செம்மையாக வாழ்வதற்காகவே இயற்றப்பட்டன.  இவற்றின் ஆழ்ந்த நோக்கத்தைப் புரிந்துகொள்ளாமல் அவைகளை வாசிப்பதாலோ அட்சரம் பிசகாமல் மனனம் செய்து உச்சரிப்பதாலோ மற்றவர்களுக்கு அவற்றை உபதேசிப்பாதலோ ஒருவன் உண்மையான உயர்வினை எட்டுவதில்லை.   அப்படிச் செய்வது அவனுக்கு வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை ஈட்டுவதற்கு மட்டுமே துணைசெய்யும். 

ஒருவனின் ஆன்ம முன்னேற்றத்திற்கான வழிகளைக் கடைப்பிடிக்குத்திடத்து அவன் தனது அன்றாட வாழ்கையை நடத்துவதுவும் அவசியமாகின்றது.   இதன் காரணமாகவே அறநூல்களில் அதற்கானத் துணையாகப் பலவகையான வழிகளும் இணைத்துச் சொல்லப்பட்டிருக்கின்றது.   மனிதர்கள் இதில் கூறப்படுகின்ற ஆன்ம விடுதலைக்கான செயல்களில் மனதைச் செலுத்தாமல் கர்மம் மட்டுமே செய்து உயர்வடைய முயற்சி செய்து வாழ்க்கையைத் தொடர்கின்றார்கள்.  கர்மமும் ஞானமும் வேறுவேறு பாதைகள் கர்மத்தையே யோகமாகச் செய்தால் ஒருவன் அதைக் கொண்டு ஞானத்தை எட்டிப் பிடிக்கின்றான்.  ஆகையால் கொடுக்கப்பட்ட ஆயுதத்தை நீங்கள் எப்படிப் பயன்படுத்துகின்றீர்கள் என்பதைப் பொறுத்தே உங்கள் உயர்வு நிர்ணயிக்கப்படுகின்றது.

தாங்கள் கூறுவது உண்மை தந்தையே.   ஆனால் வாழ்க்கை என்பது மிகவும் சிக்கல்கள் நிறைந்த பயணமாகவே இருக்கின்றது.  ஒருவன் உண்மையான ஆன்ம விடுதலைக்காக முயற்சி செய்தாலும் அவன் மற்றொருபக்கம் உணவு உடை குடும்பம் மக்கள் என்று வேறு சிலகடமைகளால் கட்டுண்டு கர்மம் செய்யவேண்டிய நிர்ப்பந்தத்தில் வாழ்கின்றான்.  இதனால் ஒருசமயம் கர்மவழ்க்கை அவனது ஆன்ம நாட்டத்தை மீறிச்சென்று ஆன்ம விடுதலைக்கான வாழ்கையைத் தொடரமுடியாமல் போய்விடுகின்றது.   அப்படியிருக்கையில் இந்த அறநூல்களில் கூறப்பட்டிருக்கின்ற வழிகளை நாம் எப்படி முழுமையாகக் கடைப்பிடிக்க இயலும்.

மகனே ஒருவன் அறநூல்கள் கூறும்  நீதி ஒழுக்க நெறிகளைக் கடைப்பிடித்து வரும் சமயம் அவன் மனதைப் பக்குவப்படுத்தி வலிமைசெய்துகொள்ளாவிட்டால் இது போன்ற குழப்பங்கள் ஏற்பட்டு அவனுக்குக் கர்ம வாழ்க்கையே பெரிதாகத் தெரியும்.  ஆகையினால் அனைத்தையும் உன் மனத்தைக் கொண்டு ஆராய்ந்து தெளிவு பெறுவது அவசியம்.   நூல்களை வாசிப்பதால் மட்டும் ஒருவன் தெளிவை அடைவதில்லை.  வாழ்கையில் ஒருவன் அடையும் அனுபவங்களே அவனை உண்மைக்கு அருகில் அழைத்துச் செல்கின்றன.   நீங்கள் அப்படி ஒரு வாழ்கையை இதுவரை வாழ்ந்திராத காரணத்தால் உங்களுக்குக் குழப்பங்கள் வருவது நியாயமே.  

ஆமாம் தந்தையே தாங்களும் தாயாரும் வாழ்வது போன்ற வாழ்க்கையை வாழ ஒரு பெண்துணையை இதுவரை எங்கள் மனம் நாடாமல் இறைநாட்டத்திலேயே முழுதும் திளைத்திருக்கின்றது.   ஆனாலும் வாழ்க்கையின் நோக்கத்தையும் பிரபஞ்சத்தின் நடவடிக்கைகளையும்   புரிந்துகொள்ள சில ஆழமான கேள்விகளுக்கான பதிலைத் தேடிக் கொண்டிருக்கின்றோம் என்று கூறிக்கொண்டே சனாதனர் தன் தாயைப் பார்க்க.  

நாமகளும் தன் புதல்வர்களைக் கருணையுடன் பார்த்துக் கொண்டே மைந்தர்களே கேள்விகளே ஒருவனுக்கு ஆராயும் மனத்தைக் கொடுத்து அவனை ஞானத்தின் படிகளில் ஏற்றி வைக்கின்றது.  உங்கள் கலக்கம் விரைவில் தெளிவடைய எனது ஆசிகளை நல்குகின்றேன் என்று கூறி அமைதியானார்.

சனத்குமாரர் தமது தந்தையைப்  பார்த்து  ஐயனே ஒருவன் ஒழுக்க நெறிப்படி வேத இதிகாச புராணங்களில் கூறிய அறவாழ்க்கையைக் கடைப்பிடித்து வாழ்ந்தாலும் அவர்களில் பலரும் பெரும் துன்பங்களையே தமது வாழ்கையில் சந்தித்து வாழநேர்வது எதனால்?.  இவ்வாறு துன்பமே வழ்க்கையாகிவிட்டால் ஒருவன் எப்படி அறவாழ்க்கையை மனம் ஒருமித்து ஏற்றுத் தொடர்ந்துநடத்த இயலும்.  இப்படித் துன்பம் அனுபவித்து வாழ்வதைவிட ஒருவன் அனைத்து பூலோகச் சுகங்களையும் அனுபவித்து வாழ்ந்துவிட்டுப் போகலாமே.   அப்படி அளப்பரிய இந்த தியாகங்களைச் செய்து ஒருஜீவன் பெறுகின்ற பலன்தான் என்ன?.

மகனே தவத்தின் பெருமையும் அதற்காக ஒருவன் செய்கின்ற தியாகங்களின் மதிப்பும் அளப்பரியது.   உன்னதமான வாழ்க்கையை நோக்கமாகக் கொண்டு வாழ்பவர்கள்  அடைய நினைக்கும் உயர்ந்த நிலையில் நீங்கள் ஏற்கனவே வழ்ந்துகொண்டிறுப்பதனால் உங்களால் அதை உணரமுடியவில்லை.  நீங்கள் எனக்குப் புத்திரர்களாகப் பிறந்து இங்கு பிரம்மலோகத்தில் எம்மோடு வாழ்ந்து வருவதே அதற்கு சாட்சி கூறும்.  அதோ உங்கள் பின்னால் நூல்களை ஆராய்ந்து கொண்டிருக்கும்  லட்சக்கணக்கான ஜீவன்களும் அப்படித் தமது வாழ்க்கையை நெறிப்படுத்தி வாழ்ந்து இங்கு வந்து சேர்ந்தவர்களே.  

சரி உங்கள் மனக் கலக்கம் தீர வழியொன்று சொல்கின்றேன் என்று தமது கையை விரித்தவுடன் அவர்கள் அருகில் நான்கு வெண்ணிறத்தாமரை வாகனங்கள் தோன்றின.

புத்திரர்களே அதில் ஏறி அமர்ந்துகொள்ளுங்கள் அது கல்லாலவிருட்சத்தில் உமையைப் பிரிந்துத் தனிமையில் அமர்ந்து தவம் செய்துகொண்டிருக்கும் மகாதேவரிடம் உங்களைக் கொண்டு சேர்க்கும்.  மகாதேவர் உங்கள் மனக்கலக்கத்தைத் தீர்த்துவைப்பார். 

தாய் தந்தையர்களிடம் வாழ்த்துக்களைப் பெற்றுக்கொண்டு நால்வரும் தாமரைவகனத்தில் அமர்ந்துகொள்ள அவைகள் தமது இதழ்களை மூடிக் கொண்டு ஒரு நீர்க்குமிழி போன்ற கோளவடிவத்திற்குமாறி இலக்கை நோக்கி மின்னலைப்போல வெட்டிக் கொண்டு பிரபஞ்சத்தினூடே பயணித்தன.  விண்ணில் பல உடுமண்டலங்களையும் கடந்துப்பயணித்து இறுதியில் கல்லால விருட்சத்தினருகில் சென்றுசேர்ந்தன.  அந்தத் தாமரை ஊர்திகளிலிருந்த சனகர் முதலான நால்வரும் அங்கே இறங்கிக்கொள்ள மீண்டும் வானில் பறந்து பிரம்மலோகம் நோக்கிச் சென்றன.   #### கந்தபுராணம் ## பகுதி 2 #  தொடரும்......
------------------------   புத்தகம் கிடைக்கும் இடம் -----------------


வாசகர் பக்கம்

கந்தன்கதை புத்தகம்   910 பக்கங்கள் மற்றும் இதன் அட்டையிலிருப்பது போன்ற அரிதான போர்க்களக்காட்சிகளின் வண்ணப் படங்களுடன் இந்த kindle பதிப்பு வ...