கந்தபுராணம் நாவல் யுடூபில் தொடராக வெளிவந்துகொண்டு இருக்கின்றது ஜீனியை தொட்டு இன்றே சப்ஸ்க்ரைப் செய்து கொள்ளுங்கள். அறிவே ஆனந்தம்

06. கந்தபுராணம் பகுதி 6-1 சூரனின் திக்விஜயம்


###கந்தபுராணம்## பகுதி 6-1 ##சூரனின் திக்விஜயம்#

###pl check with writer any of your queries  RAVIKUMAR P.  9841189033, ravikumar.writerpoet@gmail.com ###

இரவின் கடைசி யாமம் துவங்கியிருந்தது.   காலையின் இருளையும் அலைகளையும் கிழித்துக்கொண்டு பயணித்து வந்த நூற்றுக் கணக்கான நாவாய்கள் மகேந்திரபுரியின் துறைமுகத்தினருகில் வந்து  கழிமுகத்திலிருந்து காததூரத்தில் நங்கூரமிட்டுக்கொண்டு நீண்ட பயணத்திலிருந்துச் சிறிது தம்மை ஆசுவாசப் படுத்திக்கொண்டிருந்தன.

தூண்டில் வளைவுபோல அமைத்து கரையருகில் இருந்த ஒரு மொட்டைப் பாறையைத் தேர்வுசெய்து அதில் வெளிச்சத்தூண்வீடு ஒன்று நானூறுமுழ உயரத்திற்கு எழுப்பப்பட்டிருந்தது.   அதிலிருந்து ஒளித்தம்பங்கள் கடலை நோக்கி வீசிக்கொண்டிருந்தன.  பொழுது சாயும் சமயம் கொம்பு நாதம் ஊதப்பட்டவுடன் விறகுகள் கொண்டு வெளிச்சத்தூணின் மேல் சொக்கப்பனை கொளுத்தப்படும் இரவு முழுவதும் அணையாமல் எரிந்து பின்னர் சூர்யோதயத்திற்கு முன் கடைசிஜாமத்தின் இறுதியில் தொடுவானில் மெல்லொளித் தோன்றியவுடன் அது நீரூற்றி அணைக்கப்பட்டுவிடும்.

குவியாடி வழியாகச் சிலயோசனைத் தூரத்திற்கு வீசிப்பயணித்துச்  செல்லும் இந்த ஒளித்தம்பங்கள்  சில யோசனைத்தூரத்தில் நாவாய்களைச் செலுத்திக் கொண்டிருக்கும்  தண்டையல்களின் கவனத்தை ஈர்த்து  கரைநெருங்கிவிட்டதை அறிவிக்கும்.   தண்டையல்கள் திசைகளையும் தூரத்தையும் அனுமானித்துக்கொண்டு  மகேந்திரபுரியின் கரைக்குச் சுக்கான்களை பிணைத்திருக்கும்  சக்கரங்களைச் சுழற்றித் திசைதிருப்புவார்கள்.  எழுந்து நிற்கும் பல பாய்மரங்களில் ஒன்றைத் தவிர அனைத்தும் மடக்கிச்சுருட்டப்பட்டு நாவாய்களின் வேகம் வெகுவாகக் குறைக்கப்பட்டுவிடும்.

கரையை நெருங்க பல காததூரத்திலேயே  தமது அனைத்துப் பாய்மரங்களையும் அவை இறக்கிக்கொண்டு முழுவதுவும்வேகத்தைக் குறைத்துக்கொண்டு கடலலையின் வேகத்தோடு ஒன்றுபட்டுவிடும் நாவாய்கள்.   அமைதியாக அலையோடு அலையாக அனுமானித்துப் பயணித்துவந்து  முன்துறைகளைத்தொட்டு நங்கூரமிட்டுக்கொண்டு நாவாய்கள் அங்கு தம்மைக்கட்டிக் கொண்டுவிடும்.   முன்துறைகளில் கட்டும் இடம் காலியாகும்வரை மற்ற நாவாய்கள் எல்லாம் பாய்மரத்தை இறக்கிக்கொண்டு காததூரத்திலேயே நங்கூரமிட்டுக்கொண்டுக்  காத்துக்கிடக்கும்.

பாறைகள் கொண்டு பலநூறு அடிகள் கடலிற்குள் நீட்டப்பட்டுச் செயற்கையாக உருவாகப்பட்டக் கல்பரப்பில் பனைமரங்களும் மருது கோங்கு இலுப்பை மரங்களின் நெடியத்தூண்கள் புதைக்கப்பட்டு வலிமையான பனைமஞ்சினால் திருகப்பட்ட கயிறுகளால் கட்டி அதன்மேல் நீளச்செவ்வக வடிவில் புன்னை இலுப்பை மரப்பலகைகளைச்  சமமாகப்பரப்பிச் சதுர வடிவச் செம்புஆணிகளைக் கொண்டு இரண்டையும் பிணைத்து முன்னூறுமுழ இடைவெளியில் கட்டப்பட நான்கு முன்துறைகள் கழிமுகத்திலிருந்து கடலுக்குள் துறைமுகத்தை அங்கே விஸ்தரித்துக்கொண்டிருந்தன. 

நாவாய்களின் வரவுக்காகக் காத்திருந்த பரதவர்களும் திமிலர்களும் தமது தோளில் கயிற்றுச் சுருள்களைச் சுமந்துகொண்டு சென்று முன்துறைகளுக்கும் கப்பலுக்கும் ஏணிகளை இணைத்துக் கட்டிக்கொண்டிருந்தனர்.  பயணிகள் அனைவரும் இறங்கிய பின்னர் அவர்கள் கப்பலிலிருந்து சரக்குகளை இறக்கி  அருகிலிருக்கும் வணிக வீதிக்குக் கொண்டு சென்றுக் கடைகளில் சேர்ப்பிக்கவேண்டும்.   வணிகர்கள் ஒருசாமம் முன்பே வந்து இரவின் குளிரையும் பொருட்படுத்தாது காத்துக்கிடந்தனர். 

ஒவ்வொரு மூடையையும் தூக்கிக்கொண்டு கால்கள் மணலில் புதையப்புதைய நடந்து கடற்கரைச் சாலையில் நிற்கும் கைவண்டிகளில் ஏற்றிக் கயிற்றைக் கொண்டுக் கட்டிக்கொள்ளவேண்டும்.   சுங்கவாசல் நெருங்கும் முன்பே உடன் வந்த வணிகன் பொருட்களுக்குத் தகுந்த சுங்கத் தீர்வையோடு கையிடையும் கட்டிவிட்டால் வண்டி சுங்கவாசலை எளிதாகக் கடந்துவிடும்.   கொடுக்கப்படுகின்ற கையிடைக்குத் தக்கபடி தீர்வையில் கணிசமான பகுதி குறைத்து மதிப்பிடப்பட்டுத் தீர்வை வசூலிக்கப்படும். 

ஒருஆள் முன்பக்கம் இழுக்க பின்னிருந்து ஒருவன் தள்ள சரக்குகள் வணிகர்களின் சேமிப்புக் கிடங்கிற்கும் அங்காடிகளுக்கும் சென்று சேர்ந்துவிடும்.   இதற்கான சுமைகூலி பலமடங்கு பொருட்களின் மேல் ஏற்றப்பட்டு மறுநாள் விற்பனைக்கு வந்துவிடும். 

ஆடைகளும் அணிகலன்களும்,முத்துக்களும்,மணிகளும்,மதுவகைகளும்,போதைத்தரும் பொருட்களும்,மருந்து வகைகளும்,பீங்கான் கோப்பைகளும், தாமிரம்,பித்தளை,வெள்ளி,தங்கத்தால் செய்யப்பட்ட அழகுமிளிரும் கைவேலைப்பாடுகள் கொண்ட நீர்க்கோப்பைகளும் மதுக் கோப்பைகளும், உணவுப்பரிமாறும் பாத்திரங்களும்,உண்ணும் வட்டுகளும், குதிரைகளும் மகேந்திரபுரியின் இறக்குமதியில் எப்பொழுதும் பெரும்பங்கு வகித்திருக்கும். 

அயல்நாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட பொருட்களுக்கு மாற்றாக பொருட்களாக மகேந்திரபுரி எதையும் ஏற்றுமதி செய்வதில்லை மாற்றாக பெரும்பாலும் பொன் வெள்ளிக் காசுகளே மாற்றாகக் கொடுக்கப்படும்.   இருப்பினும் சில வணிகர்கள் அங்கங்கே விளைகின்ற பொருட்களைத் தருவித்து ஏற்றுமதி செய்துகொண்டிருப்பார்கள்.   காரணம் இங்கு உழைத்து வாழும் வர்க்கம் மிகக்குறைவே.   இருப்பவர்கள் அனைவரும் அரசாங்கத்தில் எதோ ஒருவகையில் பணியாளராக இருப்பார்கள் அல்லது போர்வீரனாக இருப்பார்கள் இல்லை தாசிகளாகவோ விலைமகளிராகவோ காலம் தள்ளிக் கொண்டிருப்பார்கள்.

இங்கு வாழ்கின்ற அனைவருக்கும் கடின உழைப்பில்லாது பெருகிவருகின்ற செல்வமல்லவா அதனால் அதன் பெரும்பகுதி அவர்களின் மனம் போனபடி கேளிக்கைகளுக்கே சென்றுவிடும்.   வாழ்பவர்களின் மனப்போக்கைச் சார்ந்தே மதுக்கடைகளும், கேளிக்கை விடுதிகளும்,சூதாட்ட விடுதிகளும்,விபச்சார விடுதிகளும் நிறைந்த நகரமாகவே மாறிவிட்டிருந்தது மகேந்திரபுரி.
### கந்தபுராணம் ## பகுதி 6 ல் 1 ## தொடரும்....  
--- புத்தகம் கிடைக்கும் இடம் ---


வாசகர் பக்கம்

கந்தன்கதை புத்தகம்   910 பக்கங்கள் மற்றும் இதன் அட்டையிலிருப்பது போன்ற அரிதான போர்க்களக்காட்சிகளின் வண்ணப் படங்களுடன் இந்த kindle பதிப்பு வ...