கந்தபுராணம் நாவல் யுடூபில் தொடராக வெளிவந்துகொண்டு இருக்கின்றது ஜீனியை தொட்டு இன்றே சப்ஸ்க்ரைப் செய்து கொள்ளுங்கள். அறிவே ஆனந்தம்

வாசகர் பக்கம்




கந்தன்கதை புத்தகம் 910 பக்கங்கள் மற்றும் இதன் அட்டையிலிருப்பது போன்ற அரிதான போர்க்களக்காட்சிகளின் வண்ணப் படங்களுடன் இந்த kindle பதிப்பு வெளிவந்துள்ளது. முன்பே வெளியிடப்பட்ட Black and white version paperback கைப்பிரதியாக வாங்க விரும்புவோர் 9841189033 எண்ணைத் தொடர்புகொள்ளவும்.  


       நண்பர்களே *(கந்தபுராணம்)கந்தன்கதை கிண்டில்  பதிப்பாக * வண்ணப்படங்கள் இணைக்கப்பட்டு  வெளிவந்துள்ளது. கந்தன்விருந்து மற்றும் தாரகன்,பானுகோபன், சிங்கமுகன்,சூரபன்மன் ஆகியோரின் போர்க்களக் காட்சிகள் இதுவரை இல்லாத அருமையான டிஜிட்டல் வண்ணப்படமாக இணைக்கப்பட்டு இந்நூல்  வெளியிடப்பட்டுள்ளது. கந்தபுராணத்திற்கும் ஒவ்வொரு மனிதனின் வாழ்விற்கும் நீங்காத தொடர்பு இருக்கின்றது என்பதை உணர்த்த வல்ல இந்தக் கதையை நீங்களும் படித்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டு புண்ணிய பலன்களைப் பெறுவீர்களாக.  வாசித்தவர்கள் தங்கள் கருத்துக்களை கிண்டில் வலைத்தளத்தில் பதிவுசெய்து செல்லுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். நன்றி – எழுத்தாளர்  இரவிக்குமார்










                         On Thaipoosam 08-02-2020 the auspicious day of  Kanthan,                              The Gurumaha Sannithanam Kumaragurupara Swamikal released the book KANTHANKATHAI to the public and the Director of Vinayaka Missions group of institutions has received the first copy. on the right side to the Swamiji is the writer of the book RavikumarP



ex director of educations Kumarasamy Iya receives the second copy of the book. 


Gurumaha sannithanam felicitated the Writer of the Book Kanthankathai with a silk shawl. 







கந்தபுராணத்தில் இல்லாதது வேறு எந்த புராணத்திலும் இல்லை என்பது பெரியோர்களின் வாக்கு. பதினெண் புராணங்களில் பெரியதும் முதன்மையானதும் கந்தபுராணம். 

அறிய  பல நன்மைகளை நமக்கு அள்ளித் தரும் கந்தனின் வரலாற்றை(புராணத்தை). நாவல் வடிவில் படித்து வாழ்வில் உயர்வுகள் பலவும் அடைந்து மகிழ்வீர்களாக.

கந்தனின் வரலாற்றை படிப்பது ஒரு பெரும் புண்ணியகாரியம். அதன் பலன்கள் அளப்பரியது என்பதனால் அந்த பாக்கியம் அனைவருக்கும் வாய்ப்பதில்லை. தேர்வுசெய்யப்பட்ட புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டுமே வாய்க்கின்றது.   அதில் நீங்களும் ஒருவர். 

இந்த புத்தகத்தை வாங்கிய ஒவ்வொருவருக்கும் ஏதாவதொரு நன்மையை கந்தன் கொண்டுபோய் சேர்க்கின்றார் என்பதை தினமும் வாசகர்கள் தரும் பின்னூட்டத்தால் அறிகின்றோம். நீங்களும் பெற்று வாசித்து  பலனை அடையுங்கள். .  

கௌமார மடாலயத்திலிருந்து கிடைக்கப்பெற்ற வாழ்த்துரை 




வாசகர் பக்கம்


Kanthapuranam story is really awesome... very interesting to read this Kandhankathai in a novel format. we were blessed to have such a book like this in our  home 
                                 - Sindhu Viruthunagar
ஐயா தங்களின் கந்தன் கதை படித்தவுடன் கந்தனே வந்து அமர்ந்து கதை கூறியது போன்ற மாயம்.  வள்ளி மற்றும் தெய்வயானை திருமணம் நேரிலே  கலந்து கொண்டது போன்ற நினைப்பிலே ஆழ்ந்து விட்டேன். 

தாங்களின் ஆன்மஏணி புத்தகப்  பிரதிக்கு காத்து இருக்கிறேன்.

                                நன்றி.  வணக்கம்.💐🙏  ஹரிஹரன் புனே

   கந்தன்கதை கதையாக மட்டுமல்லாமல் நிறைய யதார்த்தமான விஷயங்கள் ஆசிரியரால் இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளது. நூலை வாசிக்கும் சமயம் என்னுடைய வாழ்க்கையோடு ஒன்றிய ஒரு புராணத்தை படிப்பதாகவே உணர்ந்தேன்.  பல சமயம் கண்கள் கனிந்து குளமாகியது.  ஐயா, தாங்கள் வர்ணிக்கும் அந்த அந்த காட்சிகளை அந்த இடத்திற்கே நான் சென்று நேரில் நான் பார்ப்பது போலவே உள்ளது.  மெளனதீட்சை, பார்வதி திருமணம், வள்ளித் திருமணம், தாரகன்வதம் கந்தன் தவம், விஸ்வரூபம், சூரன்வதம் அவன் புலம்பல் படித்து சில நிமிடம் இஸ்தம்பித்து நின்றுவிட்டேன்.  மேலும் தெய்வயானை மற்றும் வள்ளித் திருமணம் அனைத்தும் அருமை.  மொத்தத்தில் இது அனைவரும் படிக்கவேண்டிய நூல் மற்றும்  ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்கவேண்டிய நூலாகும்          - பிரேமா கோவை


கந்தன்கதையில் வள்ளித்திருமணம் படித்தேன் பல வருடங்களாக தடங்கலாக இருந்த எனது மகளின் திருமணம் உடனே பிக்ஸ் ஆனது கந்தனின் கருணை கண்டு வியந்து மகிழ்ந்தேன்           – முருகன் சென்னை

தாங்கள் கந்தன்கதை மிகவும் அழகாகவும் அருமையாகவும் எழுதுகிறீர்கள் அடுத்த பதிவு எப்பொழுது வரும் என்று காத்திருப்பேன் படித்து மகிழ்வேன் நன்றி வணக்கம்.           - ரேவதி கிருஷ்ணன்
Muruga Saranam.  Excellent writing.  We are expecting more of this kind from you.Thanks          - Gomathi Sankar

நாங்கள் தமிழ் மொழியின் மேல் கொண்ட பற்றால் முருகனின் மீது  அன்போடு இருக்கும் எங்களுக்கு தாங்கள் தந்த விருந்து தான் கந்தன்கதை           --ராஜேஷ்வேலையன் சவுதியரேபியா

I never failed to take your messages gave through this story                                                                                                       -- sasidharan

You have given us so much knowledge about kandapuranam.  I read to my daughter everyday as she is pregnant.  And she can't read Tamil.  thank you for the wonderful journey with you.  through kanthankathai         - Gayathri Pune

மான் கன்று ஈன்றது படித்தபொழுது கண்களில் நீர் வழிந்தோடியது என்ன அருமையான எழுத்து வடிவம் வாழ்க வளமுடன்.  கந்தபுராணம் படிக்கப் படிக்க ஒரு திகட்டாத தேன் அமுதம் போல உளளது ரவி.  ஒரு மாங்கனியில் மனிதனின் வன்மம்,காமம்,குரோதம்,அகம்பாவம் எல்லாமே எப்படி பொசுங்கி ஒரு பிடி சாம்பலாயின என்று எடுத்துக்காட்டியது அருமை.       -- வனஜா   USA

ரவிக்குமார் அவர்களின் கந்தபுராணம் கதை படிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி       -- சேகர் செஞ்சி
  
பசுபதிகீதையில் மானின் கதை ரொம்ப அருமை       - கற்பகம் புனே

Even God's child has to go to Ashram and learn about Brahman.  Nice explanation ji.  Also kanthan thavam has touched my heart, because I am a piraanik healer.  The chakraas and the way of thabas kanthan did is astonishing and wonderful.  People should read this        - Murugan chennai

கந்தன்கதை படைப்பில் ஒவ்வொரு எழுத்திலும் உயிர் இருக்கிறதுஆசிரியர் ஆன்மீகத்தை மட்டும் எழுதாமல் நடைமுறை வாழ்க்கையோடும் ஒப்பிட்டு எழுதியிருக்கிறார் அவருடைய படைப்புகள் பாமரனும் எளிமையாக புரிந்து கொள்ளக்கூடிய அழகான எளியதமிழில் கருத்துக்களை விளக்குகிறார்எளிதில் புரிந்து கொள்ள பேருதவியாக இருக்கிறதுஞான வேள்வியில் எங்களுக்குத் தெரியாமல் மறைந்திருக்க கூடிய கருத்துக்களை வெளிப்படுத்திக் கூறியதற்கு நன்றி.       - பரமேஸ்வரி கோவை

பசுபதிகீதை ஐந்தும் ஐந்து விதமான தேர்ந்தெடுக்கப்பட்ட ரத்தினக் கற்கள்.         - கீதா வரதராஜன் பூனே

வள்ளி பகுதியும் வள்ளித் திருமணமும் வேடுவற் குடியிருப்பில் நுழைந்து வந்த உணர்வை ஏற்படுத்தியதுகல்லாலத்தின் மெளனதீட்சை அருமைசூரனின் புலம்பலும் சூரசகோதரர்களின் பக்தியின் வெளிப்பாடும் அருமை.         மொத்தத்தில் கந்தபுராணத்தின் இந்தக் கதைவடிவம் அனைத்து வயதினரும் படித்து பயன்பெறும் வகையில் துவக்கத்திலிருந்து இறுதிவரை அருமையாக வடிவமைக்கப் பட்டிருக்கின்றது.         -சுஜாதா சேலம்

கந்தனை வணங்குகின்றவர்கள் மட்டுமல்ல  ஒவ்வொருவரும் படித்து தெரிந்து கொள்ளவேண்டிய கதை இதுமிகவும் அருமையாக எழுதி வடிவமைத்துள்ளார் எழுத்தாளர் . சில இடங்களில் சாண்டில்யனை நினைவு கூறச் செய்துவிடுகின்றார்  வர்ணனைகள்  நிகழ்வுகளைக் கூறும்விதம் அபாரம் அருமை.        -- ராஜா    சேலம்

காரணம் கருதி வாசகர்களின் ஒருசில பின்னூட்டங்கள் மட்டுமே இங்கே 

பகிர்ந்துகொள்ளப் பட்டிருக்கின்றது

07.கந்தபுராணம் பகுதி 6 ல் 2 சூரனின் திக்விஜயம்



### கந்தபுராணம் ## பகுதி 6 ல் 2 ## சூரனின் திக்விஜயம்#
##pl check with writer any of your queries  RAVIKUMAR P.  7904313077, ravikumar.writerpoet@gmail.com ###

நான்கு முன்துறைகளும் நிரம்பி வழிந்துகொண்டிருந்தன.   சிறிது நேரம்கூட இடைவெளி இல்லாமல் மரக்கலங்களும் நாவாய்களும் வருவதுவும் செல்வதுமாகச் சூழ்நிலை மேலும் பரபரப்பாகிக் கொண்டிருந்தது. 

அஸ்திராலயாவிலிருந்து வந்திருந்த நிகும்பதேசத்து அரசன் தன்னுடன் ஆயிரம் குதிரைகளைக் கொண்டுவந்திருந்தான்.   அவன் கொண்டுவந்த நன்குக் கப்பல்களுக்குமட்டும் தனியாக ஒரு முன்துறை ஒதுக்கப்பட்டு சூரனின் பிரதானத்தளபதி மற்றும் அவனது மெய்க்காப்பாளர் சுரேனர் தனதுக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு குதிரைகளை சரிபார்த்து இறக்கிக்கொண்டிருந்தார்.  நிகும்பன் குதிரைகளுடன் ஒருநாவாயில் ஐம்பது பெண்களையும் சூரனுக்கு அன்பளிப்பாகக் கொண்டுவந்திருந்தான்.   இதுசுரேனனுக்கு பழகிவிட்ட ஒன்றுதான் அவர்களை அரசனின் முன்கொண்டு நிறுத்தி அவன் தேர்வு செய்ததுபோக மீதம் உள்ளவற்றை மந்திரிகளும் தளபதிகளும் பங்கிட்டுக் கொள்வார்கள். 

சுரேனனுக்கு அரசனிடம் நெருக்கம் அதிகம்.   உளவுப்படைத் தலைமையும் அவன் வசமிருந்ததால் அவனது சொல்லுக்கு பெரியமதிப்பு அமைச்சர்கள் மத்தியிலும்கூட இருந்துவந்தது.   அதனால் அரசனுக்குப் பிறகு தனக்கு வேண்டியப் பெண்களைச் சுரேனன் தேர்வு செய்துகொள்ளும் உரிமையை அரசன் அவனுக்குக் கொடுத்திருந்தார்.   ஆனாலும் சுரேனன் அதை ஒரு உரிமையாக இதுவரைப் பயன்படுத்தியது இல்லை மற்றவர்களுக்கே விட்டுக்கொடுத்துவிடுவான்.

குதிரைகள் இறங்கிக் கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு கைகளை உயர்த்தி சமிஞ்சை செய்தான்.   தூரத்தில் அவனது கையசைவைக் கண்டுகொண்ட வீரர்கள் விருந்தினர் வண்டிகளில் சிலவற்றை சுரேனன் நிற்கும் முன்துறைக்கு அருகில் அழைத்துவந்தனர். 

எளிதில் எட்டுமுதல் பத்துபேர் வரை அமர்வதற்கு வசதியாகவும் நான்குபக்கமும் அலங்காரப் பலகைகளைக் கொண்டு மூடி சிறிய சன்னல் வடிவத் துளைகளை கொண்டும் அந்த சாரட்டுகள் வந்து நின்றன.   இரவில் பணிப்பதற்கு ஏற்ப இரண்டுபக்கங்களைளும் இரண்டு லாந்தர் விளக்குகளும் அமைக்கப் பட்டிருந்தன. 

இந்த முன்துறைக்கு மட்டும் கடற்கரைச் சாலையிலிருந்து இணைப்புச்சாலை ஒன்று, இதுபோல பெண்கள் வரும் சமயமும் மன்னர்கள் பயணத்தின் போதும் நேரடியாக சாரட்டுகள் முன்துறையையின் பாலத்தைத் வந்துத்தொட்டுக்கொண்டு நிற்கும்படி கற்கள் கொண்டு மணலில் புதைத்துச்  சாலை அமைக்கப்பட்டிருந்தது. 

சுரேனன் அடிமைப் பெண்களைப் பாதுகாப்பாக இறக்கி அழைத்துக் கொண்டு செல்லக் காத்திருந்த சாரட் வண்டிகளில் அவர்களை ஒவ்வொருவராக உள்ளே பொதிக்க ஆரம்பித்தான்.   அரசனுக்குச் சேரவேண்டிய பரிசானதால் மற்ற வீரர்களோ காவலர்களோ அவர்களை நெருங்க அனுமதியில்லை.   சுரேனனே நேரடியாக இந்தப் பணியைச் செய்வது வழக்கம். 

அவனது முதுகை எதோ கூர்மையான ஒரு அம்பு குறுகுறுவென்று துளைத்துக் கொண்டிருப்பதைப் போன்ற உணர்வுடன் திரும்பியவனை எதிர்கொண்டுச் சாய்த்தது இருவிழியம்புகள்.   சிறிது நிலைகுலைந்து போனவன் சமாளித்துக் கொண்டு அவளைக் கைதாங்கலாய் வண்டியில் ஏற்றிவிட்டுவிட்டுத் தான் குதிரையை நிறுத்திவைத்திருந்த இடத்திற்கு விரைந்தான்.   புரவி கட்டியிருக்கும் இடத்திற்கு வழக்கமாக உணவு உண்பதற்காக சூர்யோதயத்திற்கு பின்னர் ஒருநாளிகை கடந்தே வருபவன் ஏன் அங்கு வந்தான் என்று அவனுக்கே புரியாமல் புரவியில் ஏறிக் கடிவாளத்தை சொடுக்கினான்.  அவளது கையின் மனம் அவனை விட்டு நீங்காமல் அவன் பிடித்திருந்த கடிவாளத்திலும் தொற்றி வீசிக் கொண்டிருந்தது.

வழக்கமாக இப்படிவரும் பரிசுப்பெண்களை அனுப்பிவிட்டுவிட்டுத் துறைமுகத்தில் உள்ள பணிகளில் மூழ்கிவிடும் அவனுக்கு மனம் பின்னோக்கி பயணித்துக் கொண்டிருந்தது.   கடற்கரையை நோக்கிச் சில அடிகள் எடுத்துவைத்த அவனது புரவி அவனையறியாமல் பாதையிலிருந்துத் திரும்பி அந்த சாரட்வண்டிகளின் பின்னல் சென்றுகொண்டிருந்த பாதுகாவலர்களுடன் சேர்ந்துகொண்டது.   காவலர்கள் முகத்தில் பெரிய ஆச்சரியம் பொங்கியது.   தலைவர் இன்று ஏன் நம்முடன் வருகின்றார் என்று அவர்களுக்குப் புரியாது ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டு புருவத்தைத் தூக்கி உதட்டைப் பிதுக்கிக்கொண்டனர்.

 அரசவைக் கூடி முடிந்தவுடன் அரசர் இந்த அன்பளிப்புகளை மாலையில் தனிமையில் பார்வையிடுவார்.   இந்த ரகசியப்பரிசுகள் பலரும் அறிய அவையில் அறிவிக்கப்படாது.   அரசனின் தனிப்பட்ட கணக்கேட்டில் வரவு வைக்கப்பட்டுவிடும்.   அதுவும் பரிசாகவந்தப்பெண்களின் சேவை மன்னனுக்குப் பிடித்துப்போய்விட்டால் அந்த தேசத்து அரசனுக்குச் சலுகைகள் வாரிவழங்கப்படும்.   மறுமுறை அந்த அரசன்  மகேந்திரபுரி வரும் சமயம் அவனுக்குத் தனி வரவேற்பு இருக்கும்.   இன்று நிகும்பதேசத்து அரசன் அதை அனுபவித்துக் கொண்டிருக்கின்றான். 

உரோமானிய தேசத்திலிருந்தும் அமெரீசியாவிலிருந்தும் சிலகப்பல்கள் வந்திருந்தன.  பெரும்பாலும் வியாபாரத்திற்காக மட்டுமே வருகின்ற அந்தக் கப்பல்களுக்கு இன்று முக்கியத்துவம் குறைவுதான்.   அமெரீசியாவிலிருந்து வரும் நாவாய்கள் கறுப்பர்கள் நாட்டினைக் கடந்து மட்டத்தீவில் சில நாட்கள் தங்கி வியாபாரம் செய்துவிட்டே இங்கு வரும்.   அதனால் இதில் மட்டத் தீவில் நெய்யப்படும் ஆடைகளும் அணிகலன்களும் உடன் நிறைந்திருக்கும். 

இன்றைய முக்கியத்துவம் வேறு.   அரசனைப் பார்க்கக் கப்பம் கொண்டுவந்த நாவாய்கள் முதல் வரிசையில் கொண்டுவரப்படும்.  காததூரத்தில்  நங்குரம் இட்டுக் காத்திருக்கும் நாவாய்களுக்கு அறிவிப்பு செய்து உடன் அழைத்து வந்து முன்துறையில் சேர்ப்பதற்கென்றே  நான்கைந்து ரோந்துக்கலங்கள் சுற்றிக் கொண்டே இருக்கும்.   இடம் காலியான சமிக்ஞை கிடைத்தவுடன் அவைகள் புறப்பட்டுத் தூரத்தில் நங்குரம் இட்டுக் காத்துக்கொண்டிருக்கும் நாவாய்களை அணுகிக் கூப்பிடும் தூரத்திற்கு அருகில் சென்று அவைகளில் பறந்துகொண்டிருக்கும் கொடிகளை அடையாளம் கண்டுகொண்டு வழிகாட்டி அழைத்துக்கொண்டுவந்து முன்துறையில்  சேர்க்கும்.

இன்று கப்பல்களின் எண்ணிக்கை வழக்கத்தைவிடப் பத்துமடங்கு அதிகம்.   காரணம் சூரன் அழைப்பை ஏற்று நட்பு அரசர்கள் பலர் அவனைச் சந்திக்க வந்திருக்கின்றனர்.   நான்கு முன்துறைகளிலும் எந்த அரசர் எங்கு வருகின்றார் என்று தெரியாமல் அழைத்துச் செல்ல வந்தவர்கள் இங்குமங்கும் ஓடிக் கொண்டிருந்தனர்.  அதனால் கரையெங்கும் ஒரே ஆரவாரமாக இருந்தது.
முன்துறையின் பாலத்தின் வழியாக இறங்குபவர்களை அடையாளம் காண்பதற்காகப் பணியாளர்கள் பலர் அவரது பெயரைச் சொல்லி உரக்க கூவிக்கொண்டிருந்தனர்.   விருந்தினர் மாளிகைக்கு அரசர்களை அழைத்துச் செல்ல குதிரைகள் பூட்டப்பட்ட சாரட்வண்டிகள் நூற்றுக்கணக்கில் கடற்கரையையொட்டிய சாலையில் தயாராக நின்றுகொண்டிருந்தன.  அதனருகே அங்கங்கே வைகறை அங்காடிகள் பல முளைத்திருந்தன.   சூர்யோதயத்திற்கு பின்னர் இவற்றில் பெரும்பாலவைகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.   ஒருசில உணவும் பானங்களும் விற்கும் அங்காடிகள் மட்டுமே பகல் முழுவதுவும் தம்பணியைத் தொடரும்.  மீண்டும் மாலையில் இவற்றின் சேவைகள் துவங்கி உற்சாக பானங்கள் பரிமாற்றம் முன்னிரவுவரை நீடிக்கும்.

இப்பொழுதுக் காலைக் குளிரைப்போக்கி இதமாக்கசிலஅங்காடிகள்சூடான மூலிகை பானங்களை  தயாரித்துக் கொடுத்து வெள்ளிக் காசுகளை அள்ளிக் கொண்டிருந்தனர்.  புட்டுகளும் அப்பமும் விற்கும் அங்காடிகள் பஞ்சமில்லாமல் எங்கும் நிறைந்திருந்தன.

 இன்று இரவுக் கேளிக்கை விடுதிகள் நிரம்பி வழியும்.   வந்திருக்கும் அரசர்கள் அனைவரும் பொற்காசுகளைக் கொண்டு விலைமகளிர்களை அர்ச்சனை செய்யப்போகின்றார்கள்.   விலைமகளிர் ஒருவருடத்திற்குத் தேவையான பொருட்களை இன்னும் சிலநாட்களில் சம்பாதித்துவிடுவார்கள்.  சாதாரண நாட்களில் யாரும்  திரும்பிக்கூடப் பார்க்காத விலைமகளுக்கும் இன்றுப் பெரிய வரவேற்பு இருக்கும்.   ஆட்டமும் பாட்டமும் மகேந்திரபுரியையே நிறைத்திருக்கும்.

தரைவழியாக வந்த அரசர்கள் மகேந்திரபுரியின் மற்ற மூன்று பக்கங்களிலும் நகரத்திற்கு வெளியே கூடாரம் அமைத்துக் கொடுக்கப்பட்ட இடத்தில் தமது சாகைகளை அமைத்துக் கொண்டுத் தங்கியிருந்தனர். 

முன்னிரவின் கடைசிஜாமம் முடிவுக்கு வந்திருந்தது.   விடிந்ததற்கான அறிகுறியாகக் கோட்டை வாசலிலிருந்து கொம்புநாதம் மூன்றுமுறை உரக்க ஒலித்துவிட்டுப் பின்அடங்கிக் கொண்டது.  இரவு முடிந்து புதுநாள் துவங்கவிருப்பதின் அடையாளமே இந்தக் கொம்புநாதம்.   சூரியன் உச்சிக்கு வந்தவுடனும் மேற்கில் மறையும்போதும் இந்த சப்தம் மீண்டும் ஒலிக்கும்.

கோட்டை மேற்தளத்தில் கொத்தளத்தில் எந்த நிழலும் படாத இடத்தில் அமைக்கப்பட்டிருந்த சூரிய கடிகாரத்தின் காவலாள் தினமும் செய்யவேண்டியப்பணியிது.

### கந்தபுராணம் ## பகுதி 6 ல் 2 ## தொடரும்.....

06. கந்தபுராணம் பகுதி 6-1 சூரனின் திக்விஜயம்


###கந்தபுராணம்## பகுதி 6-1 ##சூரனின் திக்விஜயம்#

###pl check with writer any of your queries  RAVIKUMAR P.  9841189033, ravikumar.writerpoet@gmail.com ###

இரவின் கடைசி யாமம் துவங்கியிருந்தது.   காலையின் இருளையும் அலைகளையும் கிழித்துக்கொண்டு பயணித்து வந்த நூற்றுக் கணக்கான நாவாய்கள் மகேந்திரபுரியின் துறைமுகத்தினருகில் வந்து  கழிமுகத்திலிருந்து காததூரத்தில் நங்கூரமிட்டுக்கொண்டு நீண்ட பயணத்திலிருந்துச் சிறிது தம்மை ஆசுவாசப் படுத்திக்கொண்டிருந்தன.

தூண்டில் வளைவுபோல அமைத்து கரையருகில் இருந்த ஒரு மொட்டைப் பாறையைத் தேர்வுசெய்து அதில் வெளிச்சத்தூண்வீடு ஒன்று நானூறுமுழ உயரத்திற்கு எழுப்பப்பட்டிருந்தது.   அதிலிருந்து ஒளித்தம்பங்கள் கடலை நோக்கி வீசிக்கொண்டிருந்தன.  பொழுது சாயும் சமயம் கொம்பு நாதம் ஊதப்பட்டவுடன் விறகுகள் கொண்டு வெளிச்சத்தூணின் மேல் சொக்கப்பனை கொளுத்தப்படும் இரவு முழுவதும் அணையாமல் எரிந்து பின்னர் சூர்யோதயத்திற்கு முன் கடைசிஜாமத்தின் இறுதியில் தொடுவானில் மெல்லொளித் தோன்றியவுடன் அது நீரூற்றி அணைக்கப்பட்டுவிடும்.

குவியாடி வழியாகச் சிலயோசனைத் தூரத்திற்கு வீசிப்பயணித்துச்  செல்லும் இந்த ஒளித்தம்பங்கள்  சில யோசனைத்தூரத்தில் நாவாய்களைச் செலுத்திக் கொண்டிருக்கும்  தண்டையல்களின் கவனத்தை ஈர்த்து  கரைநெருங்கிவிட்டதை அறிவிக்கும்.   தண்டையல்கள் திசைகளையும் தூரத்தையும் அனுமானித்துக்கொண்டு  மகேந்திரபுரியின் கரைக்குச் சுக்கான்களை பிணைத்திருக்கும்  சக்கரங்களைச் சுழற்றித் திசைதிருப்புவார்கள்.  எழுந்து நிற்கும் பல பாய்மரங்களில் ஒன்றைத் தவிர அனைத்தும் மடக்கிச்சுருட்டப்பட்டு நாவாய்களின் வேகம் வெகுவாகக் குறைக்கப்பட்டுவிடும்.

கரையை நெருங்க பல காததூரத்திலேயே  தமது அனைத்துப் பாய்மரங்களையும் அவை இறக்கிக்கொண்டு முழுவதுவும்வேகத்தைக் குறைத்துக்கொண்டு கடலலையின் வேகத்தோடு ஒன்றுபட்டுவிடும் நாவாய்கள்.   அமைதியாக அலையோடு அலையாக அனுமானித்துப் பயணித்துவந்து  முன்துறைகளைத்தொட்டு நங்கூரமிட்டுக்கொண்டு நாவாய்கள் அங்கு தம்மைக்கட்டிக் கொண்டுவிடும்.   முன்துறைகளில் கட்டும் இடம் காலியாகும்வரை மற்ற நாவாய்கள் எல்லாம் பாய்மரத்தை இறக்கிக்கொண்டு காததூரத்திலேயே நங்கூரமிட்டுக்கொண்டுக்  காத்துக்கிடக்கும்.

பாறைகள் கொண்டு பலநூறு அடிகள் கடலிற்குள் நீட்டப்பட்டுச் செயற்கையாக உருவாகப்பட்டக் கல்பரப்பில் பனைமரங்களும் மருது கோங்கு இலுப்பை மரங்களின் நெடியத்தூண்கள் புதைக்கப்பட்டு வலிமையான பனைமஞ்சினால் திருகப்பட்ட கயிறுகளால் கட்டி அதன்மேல் நீளச்செவ்வக வடிவில் புன்னை இலுப்பை மரப்பலகைகளைச்  சமமாகப்பரப்பிச் சதுர வடிவச் செம்புஆணிகளைக் கொண்டு இரண்டையும் பிணைத்து முன்னூறுமுழ இடைவெளியில் கட்டப்பட நான்கு முன்துறைகள் கழிமுகத்திலிருந்து கடலுக்குள் துறைமுகத்தை அங்கே விஸ்தரித்துக்கொண்டிருந்தன. 

நாவாய்களின் வரவுக்காகக் காத்திருந்த பரதவர்களும் திமிலர்களும் தமது தோளில் கயிற்றுச் சுருள்களைச் சுமந்துகொண்டு சென்று முன்துறைகளுக்கும் கப்பலுக்கும் ஏணிகளை இணைத்துக் கட்டிக்கொண்டிருந்தனர்.  பயணிகள் அனைவரும் இறங்கிய பின்னர் அவர்கள் கப்பலிலிருந்து சரக்குகளை இறக்கி  அருகிலிருக்கும் வணிக வீதிக்குக் கொண்டு சென்றுக் கடைகளில் சேர்ப்பிக்கவேண்டும்.   வணிகர்கள் ஒருசாமம் முன்பே வந்து இரவின் குளிரையும் பொருட்படுத்தாது காத்துக்கிடந்தனர். 

ஒவ்வொரு மூடையையும் தூக்கிக்கொண்டு கால்கள் மணலில் புதையப்புதைய நடந்து கடற்கரைச் சாலையில் நிற்கும் கைவண்டிகளில் ஏற்றிக் கயிற்றைக் கொண்டுக் கட்டிக்கொள்ளவேண்டும்.   சுங்கவாசல் நெருங்கும் முன்பே உடன் வந்த வணிகன் பொருட்களுக்குத் தகுந்த சுங்கத் தீர்வையோடு கையிடையும் கட்டிவிட்டால் வண்டி சுங்கவாசலை எளிதாகக் கடந்துவிடும்.   கொடுக்கப்படுகின்ற கையிடைக்குத் தக்கபடி தீர்வையில் கணிசமான பகுதி குறைத்து மதிப்பிடப்பட்டுத் தீர்வை வசூலிக்கப்படும். 

ஒருஆள் முன்பக்கம் இழுக்க பின்னிருந்து ஒருவன் தள்ள சரக்குகள் வணிகர்களின் சேமிப்புக் கிடங்கிற்கும் அங்காடிகளுக்கும் சென்று சேர்ந்துவிடும்.   இதற்கான சுமைகூலி பலமடங்கு பொருட்களின் மேல் ஏற்றப்பட்டு மறுநாள் விற்பனைக்கு வந்துவிடும். 

ஆடைகளும் அணிகலன்களும்,முத்துக்களும்,மணிகளும்,மதுவகைகளும்,போதைத்தரும் பொருட்களும்,மருந்து வகைகளும்,பீங்கான் கோப்பைகளும், தாமிரம்,பித்தளை,வெள்ளி,தங்கத்தால் செய்யப்பட்ட அழகுமிளிரும் கைவேலைப்பாடுகள் கொண்ட நீர்க்கோப்பைகளும் மதுக் கோப்பைகளும், உணவுப்பரிமாறும் பாத்திரங்களும்,உண்ணும் வட்டுகளும், குதிரைகளும் மகேந்திரபுரியின் இறக்குமதியில் எப்பொழுதும் பெரும்பங்கு வகித்திருக்கும். 

அயல்நாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட பொருட்களுக்கு மாற்றாக பொருட்களாக மகேந்திரபுரி எதையும் ஏற்றுமதி செய்வதில்லை மாற்றாக பெரும்பாலும் பொன் வெள்ளிக் காசுகளே மாற்றாகக் கொடுக்கப்படும்.   இருப்பினும் சில வணிகர்கள் அங்கங்கே விளைகின்ற பொருட்களைத் தருவித்து ஏற்றுமதி செய்துகொண்டிருப்பார்கள்.   காரணம் இங்கு உழைத்து வாழும் வர்க்கம் மிகக்குறைவே.   இருப்பவர்கள் அனைவரும் அரசாங்கத்தில் எதோ ஒருவகையில் பணியாளராக இருப்பார்கள் அல்லது போர்வீரனாக இருப்பார்கள் இல்லை தாசிகளாகவோ விலைமகளிராகவோ காலம் தள்ளிக் கொண்டிருப்பார்கள்.

இங்கு வாழ்கின்ற அனைவருக்கும் கடின உழைப்பில்லாது பெருகிவருகின்ற செல்வமல்லவா அதனால் அதன் பெரும்பகுதி அவர்களின் மனம் போனபடி கேளிக்கைகளுக்கே சென்றுவிடும்.   வாழ்பவர்களின் மனப்போக்கைச் சார்ந்தே மதுக்கடைகளும், கேளிக்கை விடுதிகளும்,சூதாட்ட விடுதிகளும்,விபச்சார விடுதிகளும் நிறைந்த நகரமாகவே மாறிவிட்டிருந்தது மகேந்திரபுரி.
### கந்தபுராணம் ## பகுதி 6 ல் 1 ## தொடரும்....  
--- புத்தகம் கிடைக்கும் இடம் ---


05. கந்தபுராணம் பகுதி 5 மௌனதீட்சை


### கந்தபுராணம் ## பகுதி 5##மௌனதீட்சை#

###pl check with writer any of your queries  RAVIKUMAR P.  7904313077, ravikumar.writerpoet@gmail.com ###

கல்லால விருட்சத்தினடியில் சனகாதிமுனிவர்கள் தவித்துக் கொண்டிருந்தனர்.   மகாதேவர் எங்குச் சென்றார் எப்போது அவரை மீண்டும் காண்பது என்று எண்ணங்கள் நால்வருக்குள்ளும் கலைந்து ஓடிக்கொண்டிருந்தது.  

சனந்தனர்  சனகரைப் பார்த்து அண்ணா இப்படி ஒரு சூழலில் நாம் இதுவரை ஆட்பட்டதில்லை.   மகாதேவர் நம்மை இப்படி நிர்கதியாக விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்.  நாம் காத்திருக்கலாமா சென்றுவிடலாமா.   காத்திருக்கலாம் என்றால் எவ்வளவு காலம் காத்திருப்பது என்றும் புரியவில்லை.   நாம் இங்கு வந்து எவ்வளவு காலம் கடந்திருக்கின்றது என்பதை உணர்வதற்கும் சாத்தியமில்லாது இருக்கின்றது.   இன்னும் எவ்வளவுக் காலம் காத்திருக்கவேண்டும் என்றும் அறிந்துகொள்ள முடியவில்லை.  காலத்தைப் பற்றி நாம் ஆராய்ந்து அறிந்த அனைத்து அறிவும் இங்குப் பலனில்லாமல் தவிக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகின்றது.

ஆம் சனந்தனா நீ கூறுவது உண்மை.  இவ்விடத்தில் காலம் என்பது தொக்கி நிற்பதுபோன்றே நானும் உணர்கின்றேன்.   பிரம்மலோகத்தில் இருக்கும் வரை நாம் காலத்தோடு பொருத்திப் பார்ப்பதற்கு அங்கே ஒரு உலகம் இருந்தது இரவு பகல் என்கின்ற வித்தியாசம் இருந்தது.   நேரத்தை அவதானிக்கத் தேவையான  இவை இல்லையென்றால் நாம் காலத்தை எதைக்கொண்டு நிர்ணயிப்பது.

சனத்குமாரா நம்மில் நீயே அறிவுத்தெளிவு மிகுதியானவன் உனக்கு என்ன தோன்றுகின்றது.  

அண்ணா உங்கள் மனநிலையில்தான் நானுமிருகின்றேன்.   இங்கே உலகங்கள் தோற்றமெடுத்து வளர்ந்து பரவிச் சென்று பின்னர் மீண்டும் மறுசுழற்சி செய்யப்படுவதுபோலத் தொற்றமளிகின்றது.  இருளும் இல்லாது ஒளியும் இல்லாத ஒருவித நிலை எங்கும் நிறைந்திருக்கின்றது.   பகலும் இரவுமற்ற இந்த இடத்தில் காலத்தின் சுழற்சியே இருப்பதாகத் தெரியவில்லையே.   சுழன்றுகொண்டிருக்கும் ஒரு சக்கரத்தின் மையம் சுழலாது நிலைபெற்றிருப்பதைப் போலக் காலம் இங்கே சுழலாமல் நகராமல் ஓரிடத்தில் நின்றுவிட்டதுபோலத் தோன்றுகின்றது.  இதன் தாக்கத்தால் என் மனதினை ஒரு வெறுமை சூழ்ந்துகொண்டு வருகின்றது.

மூவரும் அமைதியாக விழித்துக் கொண்டிருந்த சனாதனரைப் பார்க்க.  ஆமாம் சகோதரர்களே  இடத்தோடு சம்பந்தப்பட்டு நிகழ்வுகளோடு பின்னிக்கொண்டு ஒரு சங்கிலித் தொடர்போல சுற்றிவருகின்ற காலம்  அந்த சுழற்சி இல்லையெனில் எங்கிருக்கும்.   இவ்விடத்தில் அப்படிப் பட்ட சுழற்சி எதுவும் நடக்கவில்லை.   எதனோடும் ஒப்பிட்டு நோக்க இயலாததனால் நாம்  காலம் என்ற ஒன்று இல்லாததுபோலத் தோன்றுகின்றது.

சனகர் தன் சகோதரர்களைப் பார்த்து சகோதரர்களே நாம் காலத்தைவிட்டு வெளியே வந்துவிட்டோமோ என்று தோன்றுகின்றது.   இங்கே மொத்தப் பிரபஞ்சமும் சுழன்றுக் கொண்டிருக்கின்றது.   சுழலுகின்ற பிரபஞ்சத்தில் சுழலாத அசையாத ஒன்றுக்கு ஏது காலம்.  இதுவே அனைத்திற்கும் மைய அச்சாகவும் ஆதாரமாகவும் இருக்கின்றது அதனால் காலத்தைத் தாங்கிய அனைத்தும் காலம் என்கின்றவொன்று இல்லாத இங்கிருந்தே பிறக்கின்றன வளர்ந்து அழிந்து மறுசுழற்சி அடைகின்றன போலத் தெரிகின்றது.  

அவர்கள் சம்பாசனைகள் தொடர்ந்துகொண்டிருக்கும் போதுகல்லால ஆசனத்தின் மீது ஒரு மின்னல் வெட்டி மறைந்தது மீண்டும் அங்கு மகாதேவரின் உருவம் தெரிய ஆரம்பித்தது.  

முனிவர்கள் கலக்கம் மறைந்து பெருமூச்செறிந்தனர்.

மகாதேவர் சனகாதி முனிவர்களின் கலக்கமும் கவலைத் தோய்ந்த முகங்களையும் பார்த்துப் புன்னகைத்தார். 

இதுவே நல்ல நேரம் நாம் கேட்க வேண்டியதனைத்தையும் கேட்டுவிட வேண்டியதுதான் என்று நினைத்துக்கொண்டு தாம் யார் என்றும் எதற்காக இங்கு வந்திருக்கின்றோமென்று கூறலாயினர்.  புன்னகையைத் தவிர மறுமொழி ஏதுமின்றி மகாதேவர் அவர்களைக் கவனித்துக்கொண்டிருந்தார்.  முனிவர்கள் தம் தந்தையிடம் உரையாடியதுபோல மனதில் எழுந்தக் கேள்விகள் சிலவற்றை அவரிடம் கேட்கலாயினர்.   அனைத்தையும் கிரகித்துக் கொண்ட மகாதேவர் அவர்கள் நால்வரையும் ஆழமாகப் பார்த்துக் கொண்டே தமது கையில் சின்முத்திரை காட்டிப் புன்னகையொன்றை உதிர்த்தார். 

ஐயன் எதோ கூறப்போகின்றார் என்று நினைத்த சனகாதி முனிவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.  தேவரின் பார்வை அவர்களை இன்னும் ஆழமாக ஊடுருவிக் கொண்டிருந்தது.  முனிவர்களின் மேனியிலிருந்த பதட்டம் அடங்கிவிட்டிருந்தது, மூச்சும் ஆசுவாசப்பட்டு அமைதியாகிக்கொண்டுவருவதை உணரவாரம்பித்தனர்.   மகாதேவர் எந்தச் சலனமுமின்றி அவர்களை திடதிருச்டியோடு பார்த்துக்கொண்டிருந்தார்.  முனிவர்களின் மனக்கலக்கம் நீங்கி மனம் தெளிவடைந்துகொண்டிருந்தது.
 
அவர்களின் காதுகளில் பேரிகை போல ஒலித்துக்கொண்டிருந்த இதயத்துடிப்புச் சப்தமுமடங்கி ஒலியற்று அவர்களுக்குள்ளே எங்கும் நிசப்தம் நிலவியது.  மலையை விழுங்கிவிட்டவர்கள் போல அவர்களுக்குள்ளே ஒரு பெரியகனம் வந்து சூழ்ந்துகொண்டது.  மௌனத்தின் பாரமேறஏற எங்கே உடலும் மனமும் வெடித்துச் சிதறிவிடுமோ என்று முனிவர்கள் பயம்கொள்ள ஆரம்பித்தனர்.  மகாதேவரின் திருஷ்டி அவர்களைவிட்டு விலகவில்லை.  முனிவர்களுக்குள்  எழுந்துகொண்டிருந்த கேள்விகள் அனைத்தும் அவைகள் எழுந்த இடத்திலேயே அடங்கி சூனியத்திற்குள் புதைந்துபோயின.   அவர்களிடத்துஎங்கும் எதிலும் அசைவுகளில்லை சப்தமில்லை நாட்டமில்லை வெறுப்பில்லை கேள்வியில்லை பதிலில்லை வாதவிவாதமில்லை குழப்பமில்லை சிந்தனையுமில்லை உள்ளும் புறமும் எங்கும் மௌனத்தினாட்சி கடைவிரித்திருந்தது.  

மெளனக்கடலில்  மூழ்கித் திளைத்துக்கொண்டிருந்த முனிவர்கள் தாம் கற்றுப்பயின்றுத் தேரியதாகக் கர்வம்கொண்டிருந்த அனைத்து வித்தைகளும்,கலைகளும்,ஞானங்களும் உடைந்த சிறுமரத்துதுண்டுகளாகஅந்தக்கடலில் அங்கங்கே மிதந்து கொண்டிருப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சியுற்றனர்.  அக்கணமே அவர்களது ஆணவம் நிலைகுலைந்து மாண்டுபோனது.   அவர்களது ஆன்மா இறுதியாகத் தாம் எதைக் கற்கவேண்டுமோ அது தமக்குக் கற்பிக்கப்பட்டுவிட்டதை உணர ஆரம்பித்தது.
நாடிவந்தவர்களை வழியனுப்பிவைக்க  நினைவுகள் சூழ்நிலையோடு பொருந்தியிருக்கவில்லை,  மகாதேவர் மீண்டும் தவத்தில் மூழ்கினார்.

முனிவர்கள் நினைவுத் தெளிந்து தமதுத்தந்தையை நினைக்க அவர்களைச் சுற்றி நான்குத்தாமரை விமானங்கள் வந்திறங்கின.   அவை அவர்களைச் சுமந்துகொண்டு பிரம்மலோகத்தை நோக்கிச் செல்ல ஆரம்பித்தன.

சூனிய வனத்திற்கருகில் இருந்த அரண்மனைக் கொத்தளத்தின்  காவலர்கள் போருக்கான முரசினை ஒலித்து அனைவரையும் விழிப்படையச் செய்துகொண்டிருந்தார்கள்.   தூரத்தில் மூன்று ஒளிப்புள்ளிகள் கோட்டையை நோக்கி வந்துகொண்டிருந்தன.   தேவர்கள் விமானத்தில் வந்தே போர்புரிவார்கள் எனவே படையை எச்சரிக்கை செய்யும்பொருட்டு முரசு ஒலித்துக்கொண்டிருந்தது.

சிவபூசையில் இலயித்திருந்த  அரசியர்கள் மூவரும் போர்முரசு ஒலிப்பதையும் துந்துபிகள் சப்தமிடுவதையும் கேட்டுத் திடுக்கிட்டார்கள்.  இது என்ன சோதனை மன்னர் இல்லாதபோது இப்படியொரு சங்கடம் என்று அவர்களுக்குக் கலக்கம் ஏற்பட்டது.  மந்திரிகளுக்கும் தளபதிகளுக்கும்  அழைப்பை எடுத்துக் கொண்டு வீரர்கள் பறந்தனர். 

தூரத்தில் தெரிந்த அந்த வானூர்திகளைஎதிர்கொண்டழிப்பதற்காக  கொத்தளத்தில் நின்றுகொண்டிருந்த வீரர்கள் தங்கள் ஆயுதங்களை எடுத்துத் தயார் நிலையில் வைத்துக் கொண்டார்கள்.  அம்புகளையும் கல்லையும் வீசுகின்ற எந்திரங்களும், தீயுருண்டைகளைக்கக்குகின்ற எந்திரங்களும் தயார்நிலைப் படுத்தப்பட்டன.

பிற இடங்களிலிருந்து தேவையான போர்வீரர்களை வரவழைக்கச் சிலர் புரவியில் ஏறிச் செல்ல ஆரம்பித்தனர்.  அருகில் ரோந்துப் பணியிலிருந்த வீரர்கள் அரண்மனை வேலையில் மூழ்கியிருந்தவர்கள் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் அனைவரையும் உரத்து ஒலித்த போர்முரசின் சப்தம் கலக்கத்துடன் விழிக்கவைத்தது.  அனைவரும் தங்கள் ஆயுதங்களைத் தேடி எடுத்துக்கொண்டு கோட்டை வாயிலை நோக்கி ஓடினர்.

தூரத்தில் ஒளிப் புள்ளிகளாகத் தெரிந்த அந்தப் பறக்கும் ஊர்திகள் வீரர்களின் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது.   நெருங்கிவரவர அதன் வடிவமும் பிரகாசமும் தேவர்கள் போர்தொடுத்து வந்துவிட்டார்களோ என்ற அச்சத்தை ஊட்டியது.   எந்த எதிர்ப்புகளும் தெரிவிக்காமல் அருகில் வந்த பறக்கும் ஊர்திகளின்மீது வீரர்கள் தொடுத்த அம்புகளும் வேல்களும் கற்களும் தீயுருண்டைகளும் அவைகளைத் தொடும் முன்னரே வலிமையிருந்து கருகி வீழ்ந்ததைப் பார்த்தவர்களின் மனம் மேலும்கிலிகொண்டு நடுங்கியது.

இந்த எதிர்ப்புகளை எதையும் ஒருசிறிதும் பொருட்படுத்தாது அமைதியாக வானில் தவழ்ந்துவந்த இந்திரஜாலவிமனங்கள் அரசியர்கள் பூசை செய்துகொண்டிருந்த ஆலயத்தின் முன்புக் கீழிறங்கியது.  திகிலோடு அதைப் பார்த்துக் கொண்டிருந்த அரசிகளுக்கு அதிலிருந்து கீழிறங்கும் தமது சுவாமிகளைப் பார்த்தவுடன் காலிலிருந்து தலைவரைச் சில்லிட்டு என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே சிலைபோல நின்றுகொண்டிருந்தனர்.  

தேவி ஏன் அப்படியே நின்றுவிட்டாய் என்ற சூரனின் வார்த்தைக் கேட்டு நினைவு திரும்பிய பதுமகோமளை கண்கள் விரியச் சூரனின் அடிகளைப் பற்றி எழுந்தாள்.  

பதுமகோமளையை தன்னுடன் அணைத்துக் கொண்ட சூரன்,  தேவீ கலக்கம் கொள்ளாதே நீ இவ்வாறு இனிச் சிவனைப் பூசித்துத் துன்பப்பட அவசியமில்லை.  நாம் மூவரும் தவத்தால் மூவுலகும் வெல்வதற்கான வரம் பெற்றுவந்தோம்.  இனி அந்த ஈசனே நினைத்தாலும் எம்மை எதிற்கொண்டழிக்க இயலாது.  அண்ட சராசரங்களையும் எம் வலிமையால் கட்டியாள்வோம்.  அவுணர்கள் குலம் மிகுந்த வலிமையுடன் தழைக்கும் கவலைக் கொள்ளாதே.   என்று அவள் விழிகளை உயர்த்திப் பார்க்கச்  சூரனின் வசனம் கேட்டு சந்தோசமும் கவலையும் கொண்ட ஒரு பார்வை அவளிடத்திலிருந்து மீண்டது.

சூரனின் வரவு அங்கு அரசிக்குப் பாதுகாப்பிற்காகவும் அரசகாரியங்களைக் கவனித்துக் கொள்ளவும் உடன் வாழ்ந்திருந்த மந்திரிப்பிரதானிகளுக்குத் தெரியப்படுத்தப்பட்டு அவர்கள் வாசலில் வந்து காத்திருப்பதை அறிந்த சூரன் அவர்களை அருகில் அழைத்தான்.

அசுர வேந்தனுக்கு வாழ்த்துக்கள் கூறி அங்கு வந்த மந்திரிப் பிரதானிகளிடம் சூரன் நாம் தவம் செய்த காலத்து இங்குள்ள மக்கள் பல துன்பங்களை அனுபவித்துள்ளனர் ஆகையால் நாம் தவம் செய்தகுன்றைச் சுற்றியுள்ளக் கிராமங்களுக்கு எம் பெயரில் தானங்கள் செய்யுங்கள்.   நாம் வரம்பெற்ற நாளை நினைவுறுத்தி விழாக்கள் கொண்டாடும்படியும் அதற்குத்  தேவையான பொன்னையும் பொருளையும் நீவிர் அரசுக்கருவூலத்திலிருந்து அவர்களுக்கு அளியுங்கள்.   என்று  அறிவுறுத்திவிட்டு அரசியர்களுடன் மூவரும் விமானங்களில் ஏறி அமர்ந்துகொள்ள விமானங்கள் எழுந்து மகேந்திரபுரியை நோக்கிப்பறக்க ஆரம்பித்தன.  

கோட்டையின் கொத்தளத்தில் வீரர்கள் என்ன நடக்கின்றது என்று புரிந்துகொள்ள முடியாமல் குழம்பிக் கொண்டிருக்க அவர்கள் பார்வையின் முன்னே கீழிறங்கிய விமானம் இப்பொழுது  மேலெழும்பியதைக்   கண்ணுற்ற வீரர்கள் அவற்றின்மீது வீரர்கள் தமது ஈட்டியை எரிவதற்குத் தயார் செய்வதற்குள் விமானங்கள் வானில் பறந்து ஒரு புள்ளியாக மறைந்துபோனது.   அசம்பாவிதம் ஏதும் நடந்ததுபோலத் தெரியாத சந்தோசக்குழப்பத்தில் சேதி அறிவதற்காக கொத்தளத்துக் காவல் தலைமை மணியக்காரரை மந்திரியைக் காண அனுப்பிக் கொண்டிருந்தார்.
### கந்தபுராணம் ## பகுதி 5 ## தொடரும்....  

வாசகர் பக்கம்

கந்தன்கதை புத்தகம்   910 பக்கங்கள் மற்றும் இதன் அட்டையிலிருப்பது போன்ற அரிதான போர்க்களக்காட்சிகளின் வண்ணப் படங்களுடன் இந்த kindle பதிப்பு வ...